தினகரன் 26.08.2010
குப்பை பிரச்னைக்கு தீர்வு காணும் வரை மாநகராட்சி லாரிகள் சிறைபிடிப்பு தொடரும் ராமையன்பட்டி பொதுமக்கள் அறிவிப்பு
நெல்லை, ஆக. 26: நெல்லை மாநகராட்சி பகுதிகுப்பை கள் ராமையன்பட்டியில் கடந்த 10 ஆண்டுகளாக கொட்டப்பட்டு வருகின் றன. பாதாள சாக்கடை கழிவுகளும் இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு திருப்பி விடப்படுவ தால் ராமையன்பட்டி பகுதி முழுவதும் குப்பை கள், சாக்கடை துர்நாற்றம் வீசுகிறது. இங்கு குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.
கடந்த மாதம் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தில் குப்பைகள் கொளுந்து விட்டு எரிந்தன. பல நாட்கள் போராடியும் தீயை அணைக்க முடியாமல் மாநகராட்சி நிர்வாகத்தினரும், தீயணைப்பு துறையினரும் திணறி வருகின்றனர். இங்கு ஏற்பட்ட புகைமூட்டத்தால் சுவாச கோளாறு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பொதுமக்கள் ஆளாகினர். இறுதியில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்த கழிவுநீரை தீயை அணைப்பதற்கு பயன்படுத்தினர்.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சுதந்திர தினத்தன்று தங்களது பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டம் நடத்த விடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். குப்பை லாரிகளை தங்களது பகுதிக்குள் விடுவதில்லை என பொதுமக்கள் முடிவு செய்தனர். தற்காலிகமாக குப்பைகள் கொட்டப்பட்டு வந்த சீவலப்பேரி சாலையில் இடமில்லாமல் போனதால் நேற்றுமுன்தினம் மீண்டும் ராமையன்பட்டிக்கு குப்பை கொட்ட சென்ற 2 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
இந்நிலையில் ராமையன்பட்டி பொதுமக்கள் அடுத்த கட்ட போராட்டத்துக்கு தயாராகி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக தேமுதிக களமிறங்க முடிவு செய்துள்ளது.
இது குறித்து தேமுதிக மாநகர் மாவட்ட செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன் கூறும் போது, ‘இதுவரை ராமையன்பட்டி பிரச்னைக்கு தீர்வு காணாமல் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது. குப்பை கிடங்கை சுற்றி மரம் நடுதல், பைப் லைன் அமைத்தல், வலை அமைத்தல் உள்ளிட்ட எந்தவிதிமுறைகளும் பின்பற்றப்படவில்லை.
பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு மைய தொட்டி தளம் சரியாக அமைக்கப்படாததால் கழிவுநீர் வழிந்தோடி ஆற்றில் கலக்கிறது. ஆற்றுத் தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. கிராம சபை கூட்டம் ஒத்திவைப்பு, லாரிகள் சிறைபிடிப்பு போன்று பல்வேறு பிரச்னைகள் நடந்தாலும் மாநகராட்சி நிர்வாகம் இதுவரை எந்த விளக்கத்தையோ, மாற்று நடவடிக்கை குறித்தோ எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுடன் இணைந்து போராட தேமுதிக சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்‘ என்றார்.