குமாரபாளையத்தில் பொழுதுபோக்கு பூங்கா திறப்பு
குமாரபாளையம் நகராட்சியில் சிறப்பு தன்னிறைவுத் திட்டத்தின் கீழ், ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கட்டப்பட்ட பூங்கா திறப்பு விழா சின்னப்பநாயக்கன்பாளையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜகந்நாதன் தலைமை வகித்தார். ஈரோடு தொகுதி மக்களவை உறுப்பினர் அ.கணேசமூர்த்தி, நாமக்கல் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர், குமாரபாளையம் நகர்மன்ற துணைத் தலைவர் கே.எஸ்.எம்.பாலசுப்பிரமணி, நகர கூட்டுறவு வங்கித் தலைவர் ஏகே.நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர்மன்றத் தலைவர் சிவசக்தி கே.தனசேகரன் வரவேற்றார்.
தமிழக தொழில் துறை அமைச்சர் பி.தங்கமணி பூங்காவைத் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியது:
மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசும், கர்நாடக அரசும் வஞ்சித்ததால் கரைபுரண்டு ஓடும் காவிரி வறண்டு காணப்படுகிறது. விவசாயம் பாதித்து குடிநீருக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் நிறைந்த இந்தப் பகுதியில் பொழுது போக்கவும், மன நிம்மதி பெறவும் குழந்தைகளுக்கும், முதியோருக்கும் இந்தப் பூங்கா பேருதவியாக இருக்கும். சிறப்பு தன்னிறைவுத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இந்தப் பூங்காவுக்கு நிதியுதவி வழங்கியோர் பாராட்டுக்குரியவர்கள்.
நாமக்கல், திருச்செங்கோடு பகுதியில் அமைக்கப்பட்ட பூங்காக்களைக் காட்டிலும் சிறப்பாக உள்ளது. இதனை, சிறப்பும் அழகும் குறையாத வகையில் பாதுகாக்க வேண்டும்.
குமாரபாளையம் தொகுதியில் தனியார் கல்லூரிகளுக்கு இணையான கல்வியை வழங்கும் வகையில் அரசுக் கல்லூரி தொடங்க அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பினை வழங்கும் கலைப் படிப்புகளைத் தேர்வு செய்யும் மாணவ, மாணவிகளுக்கு அரசு பல்வேறு உதவிகளுடன், மடிக் கணினியும் வழங்குகிறது என்றார்.
திட்ட இயக்குநர் சி.மாலதி, ஆணையர் க.கிருஷ்ணமூர்த்தி, பொறியாளர் ராஜேந்திரன், நகர்மன்ற உறுப்பினர்கள் முருகேசன், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், மதிமுக நகரச் செயலர் சிவக்குமார், பள்ளிபாளையம் நகர்மன்றத் தலைவர் வெள்ளியங்கிரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.