தினமலர் 20.04.2017
குழாயில் ஒரு சொட்டு நீர் கூட கசியக்கூடாது; பொதுமக்களுக்கு சென்னை குடிநீர் வாரியம் அறிவுரை
சென்னை : சென்னையில் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான
வறட்சியை சமாளிக்க, பொதுமக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக்
கொண்டுள்ள குடிநீர் வாரியம், நிலத்தடி நீரை மோட்டார் மூலம் உறிஞ்ச, ஒன்பது
மணிநேரம் இடைவெளி தர வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
இது
குறித்து, சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பருவமழை பொய்த்ததால், சென்னையில் ஏரிகள் வறண்டன. நிலத்தடி நீர்மட்டம்
குறைந்தது. இருப்பினும் பொதுமக்களுக்கு குடிநீர் கிடைத்திட, சென்னை
குடிநீர் வாரியம் பல்வேறு மாற்று ஏற்பாடுகளை செய்து வருகிறது.பொதுமக்களும்
குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி, குடிநீர் ஆதாரங்களை பாதுகாக்க வேண்டும்.
ஆழ்துளை கிணறுகளை முறையாக பயன்படுத்துவதுடன் வீடுகளில் உள்ள மழைநீர்
கட்டமைப்புகளை சீரமைக்க வேண்டும். மேலும், குடிநீர் தட்டுப்பாட்டை
சமாளிக்க குடிநீர் வாரியத்திற்கு ஒத்துழைக்க வேண்டும்.
சென்னை
நகரின் குடிநீர் தேவை, 830 மில்லியன் லிட்டர். கடந்த மாதம் வரை, இந்தளவு
குடிநீரை வாரியம் வினியோகித்து வந்தது. தற்போது பற்றாக்குறை
ஏற்பட்டிருப்பதால் மீண்டும் பருவமழை பெய்து, குடிநீர் ஆதாரம் கிடைக்கும்
வரை குடிநீர் வினியோகத்தின் அளவு, 550 மில்லியன் லிட்டராக குறைக்கப்பட்டு
உள்ளது.
இந்த அளவை மேலும் குறைக்காமல்
இருக்க, வாரியம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு
ஒத்துழைப்பு வழங்கும் வகையில், வீடுகளில் பயன்படுத்தும் குழாயிலோ,
தெருக்குழாயிலோ ஒரு சொட்டு நீர் கூட கசியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஒரு
குழாயில், ஒரு சொட்டு நீர், 10 மணிநேரம் தொடர்ந்து கசிந்தால், 20 லி.,
தண்ணீர் வீணாகும். ஒரு வீட்டில், 20 லி., தண்ணீர் என, சென்னையில் உள்ள, 10
லட்சம் வீடுகளில் நீர் கசிந்தால், தினமும், 2 கோடி லி., நீர் வீணாகும்.
இதை
கருத்தில் கொண்டு, குழாய்களை மூடி வைக்க வேண்டும். மின் மோட்டார் மூலம்
நிலத்தடி நீரை பயன்படுத்தும் போது, ஒன்பது மணிநேர இடைவெளி தர வேண்டும்.
அப்போது தான் நிலத்தடி நீரூற்று சீராக இருக்கும். மின்மோட்டாரை
தொடர்ச்சியாக பயன்படுத்தினால் மின்சாரம் வீணாவது மட்டுமல்லாது நிரூற்றிலும்
தடை ஏற்படும்.
வானிலை ஆய்வு மையம், இந்த
ஆண்டு கோடை மழை பெய்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால்
பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள மழைநீர் கட்டமைப்புகளை சீரமைக்க
வேண்டும். அவற்றை நல்ல முறையில் பராமரித்து தயார் நிலையில் வைத்தால், மழை
பெய்யும் போது நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்வதோடு, நிலத்தடி நீரின்
தன்மையும்
மேம்படும்.பொதுமக்களுக்கும் அத்தகைய குடிநீர் ஆதாரங்களை பாதுகாக்கும்
பொறுப்புள்ளது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அதில்
தெரிவிக்கப்பட்டு உள்ளது.