தினமலர் 06.01.2010
கூடலூரில் இறைச்சி கடைக்கு ‘சீல்‘
கூடலூர் : நோய் தாக்கிய இறைச்சியை விற்பனை செய்தது தொடர்பாக, கூடலூர் ஹில்வியூ சாலையில் உள்ள இறைச்சி கடைக்கு “சீல்‘ வைக்கப்பட்டது.கூடலூரில் சுற்றித்திரிந்த நோய் தாக்கிய மாடு ஒன்றை நகராட்சி ஊழியர்களிடம் மக்கள் ஒப்படைத்துள்ளனர். அதே நேரத்தில், கூடலூர் நகரில் உள்ள ஒரு கடையில், நோய் தாக்கிய மாட்டின் இறைச்சி விற்பனை செய்ததாகவும், அதனை பொதுமக்கள் பலர் வாங்கி உட்கொண்டதாகவும் புகார் எழுந்தது. இது குறித்து நகராட்சி அதிகாரிகளுக்கு புகார் வந்தது. நகரமன்ற கூட்டத்திலும் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.இந்நிலையில், நேற்று காலை கூடலூர் கிராம நிர்வாக அலுவலர் வேலாயுதம் முன்னிலையில், நகராட்சி சுகாதார ஆய்வாளர் கக்கமல்லன் தலைமையில், புகார் எழுந்த இறைச்சி கடைக்கு “சீல்‘ வைக்கப்பட்டது. கூடலூரில் கால்நடை டாக்டரின் மருத்துவ சான்று பெறாமல் மாடுகளை அறுவை செய்து இறைச்சி விற்பனை செய்வதாக புகார் எழுந்ததால், விசாரணை நடந்து வருகிறது.