தினமலர் 22.02.2010
கூடலூர் ஆர்.டி.ஓ., உத்தரவு : நீர் சுத்திகரிப்பு தொட்டி சீரமைப்பு
கூடலூர் : கூடலூர் ஆர்.டி.ஓ., உத்தரவின் படி, மேல் கூடலூர் நீர் சுத்திகரிப்பு தொட்டி சீரமைக்கப்பட்டு வருகிறது.மேல் கூடலூர், கே.கே.நகர், குறிஞ்சி நகர், நடு கூடலூர், ஹெல்த்கேம், தோட்டமூலா பகுதி மக்களுக்கு, மேல்கூடலூர் கல்லடி ஆற்றில் சிறு தடுப்பணை அமைத்து, நீர் வினியோகிக்கப்படுகிறது. ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளதால், தடுப்பணைக்கு கீழ் வழிந்தோடும் ஆற்று நீரை ரப்பர் குழாயால் உறிஞ்சி, மேல்கூடலூர், கே.கே. நகர் பகுதிக்கு செல்லும் குழாயில் இணைக்கப்பட்டது.
ஆனால், ரப்பர் குழாய் இணைக்கப்பட்ட பகுதி கழிவு நிறைந்து காணப்பட்டதால், நீரை பருகும் மக்களுக்கு நோய் பரவும் நிலை ஏற்பட்டது; சுகாதாரமான நீரை வழங்க மக்கள் வலியுறுத்தினர். கூடலூர் ஆர்.டி.ஓ., ஹரிகிருஷ்ணன் தலைமையில் வருவாய் துறையினர், கடந்த மாதம் ஆய்வு செய்தனர். சுகாதாரமான நீர் வினியோகிக்கவும், பணிகள் குறித்து அறிக்கை வழங்கவும் கூடலூர் நகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். ஆர்.டி.ஓ., உத்தரவின் படி, தற்போது, கல்லடி நீர் சுத்திகரிப்பு தொட்டி சீரமைக்கும் பணியை, நகராட்சியினர் மேற்கொண்டுள்ளனர். “பணிகள் முடிந்த உடன், சுகாதாரமான நீர் வினியோகிக்கப்படும்‘ என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.