தினகரன் 26.11.2010
கூடுதல் உயரத்தில் கட்டப்பட்ட அங்கீகாரமற்ற கட்டிடங்கள் இடிக்கப்படும்
புதுடெல்லி, நவ. 26: அனுமதிக்கப்பட்டதை காட்டிலும் கூடுதல் உயரத்தில் கட்டப்பட்ட கட்டிட உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதி இல்லாத தளங்கள் இடித்து தள்ளப்படும் என்று மாநகராட்சி நிலைக்குழு தலைவர் யோகேந்தர் சந்தோலியா தெரிவித்துள்ளார். இதற்காக விதிமீறிய கட்டிடங்களின் புள்ளிவிவரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
கிழக்கு டெல்லி லட்சுமி நகரில் 5 மாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில் 70 அப்பாவிகள் பரிதாபமாக பலியாயினர். இவர்களில் பெரும்பாலானவர்கள் கூலித் தொழி லாளர்கள். இந்த கட்டிட உரிமையாளர் அம்ரித் பால் சிங்குக்கு 3 மாடி மட்டுமே மாநகராட்சியால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துவிட்டு 5 மாடிகள் வரை கட்டியுள்ளார்.
பலமான அஸ்திவாரம் இல்லாத அந்த கட்டிடம், 5 மாடிகளை தாங்க முடியாமல் இடிந்து விழுந்துள்ளது. இதை தொடர்ந்து அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதல் உயரத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் கே.எஸ்.மெஹ்ரா கூறியதாவது:
மாநகராட்சி எல்லையில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத குடியிருப்பு பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதல் உயரத்தில் இருக்கும் கட்டிடங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
பல பகுதிகளில் டெல்லி மாஸ்டர் பிளான் திட்டத்தில் பல பகுதிகளில் 15 மீட்டர் உயரத்துக்கும் கூடுதலாக கட்டிடங்கள் கட்ட அனுமதி இல்லை. ஆனால், இந்த விதியை பல கட்டிட உரிமையாளர்கள் மீறியுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
இதுபோன்ற கூடுதல் உயரத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான நடவடிக்கையில் தீவிரமாக இறங்கி உள்ளோம்.
கிழக்கு டெல்லி லட்சுமி நகரில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த இடத்தில், ரூர்கியில் இருந்து வந்த மத்திய கட்டிட ஆய்வு அமைப்பின் அதிகாரிகள் கட்டிட மாதிரிகளை எடுத்து ஆராய்ந்து வருகின்றனர். இதேபோல் இப்பகுதியில் வேறு சில கட்டிடங்களின் அவர்கள் ஆராய்ந்தனர்.
அவர்களிடம் இருந்து அறிக்கை கிடைத்த பின்னர், பலமில்லாத கட்டிடங்களை இடித்து தள்ளுவது உட்பட தேவையான நடவடிக்கைகளை மாநகராட்சி எடுக்கும்.
கிழக்கு டெல்லி லட்சுமி நகர் பகுதி ஆய்வை முடித்த பின்னர் மத்திய கட்டிட ஆய்வு அமைப்பினர் உதவியுடன் டெல்லி முழுவதும் கட்டிடங்களின் பலத்தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.
அனுமதியற்ற கட்டிடங்களின் தளங்களை இடிக்கும்போது, அவற்றுக்கான செலவை கட்டிட உரிமையாளரிடம் இருந்து வசூலிப்பதா அல்லது மாநகராட்சியே அதை தருவதா என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது. இவ்வாறு ஆணையர் கூறினார்.
மாநகராட்சி நிலைக்குழு தலைவர் யோகேந்தர் சந்தோலியா கூறும்போது, “அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதல் உயரத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களின் தளங்கள் இடித்து தள்ளப்படும். அதன் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.