தினகரன் 19.08.2010
கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் ஆய்வு செய்ய கோரிக்கை தரமற்ற சிமென்ட் சாலை
கூடுவாஞ்சேரி, ஆக. 19: நந்திவரம் கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் ரூ.1 கோடி செலவில் அமைக்கப்படும் சிமென்ட் சாலை பணியை பேரூராட்சி உதவி இயக்குனர் ஆய்வு செய்ய வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நந்திவரம் கூடுவாஞ்சேரியில் 10 ஆண்டுகளுக்கு முன் 2 ஏக்கரில் பஸ் நிலையம் கட்டப்பட்டது. பேரூராட்சி பொது நிதி மற்றும் அரசின் சிறப்பு நிதி ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் பஸ் நிலையத்துக்குள் சாலை அமைக்கவில்லை.
இங்கிருந்து தினமும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு நூற்றுக்கும் மேலான வழித்தடங்களில் பஸ் இயக்கப்படுவதால், பஸ் நிலையம் குண்டும் குழியுமாக மாறியது. மழைக்காலத்தில் கழிவுநீருடன், மழை நீரும் சேர்ந்து சேறும் சகதியும் தேங்கியது. பயணிகள் கடும் அவதிப்பட்டனர். பஸ்களும் நிலையத்துக்குள் வந்து செல்ல சிரமமாக இருந்தது. இதையடுத்து, பஸ் நிலையத்துக்குள் சிமென்ட் சாலை அமைக்க பயணிகள் கோரிக்கை விடுத்தனர். ரூ.1 கோடி செலவில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆனால், தரமற்ற வகையில் சாலை அமைக்கப்படுவதாக மக்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். பேரூராட்சி உதவி இயக்குனர் மற்றும் செயல் அலுவலர் ஆகியோர், பஸ்நிலையத்துக்குள் அமைக்கப்படும் சிமென்ட் சாலை பணியை ஆய்வு செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.