தினமணி 02.02.2010
கூவம் நதிக்கரையை அழகுபடுத்த சிவானந்தா சாலையில் பூங்கா: துணை முதல்வர் மு.க. ஸ்டாலின்
சென்னையில் சிவானந்தா சாலையில் கூவம் நதிக்கரை பூங்கா அமைக்கும் பணியினை
பார்வையிடுகிறார் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன் சென்னை மேயர் மா.சுப்பிரமணியன், மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி, பொதுப்பணித்துறை முதன்மைச் செயலர் எஸ்.ராமசுந்தரம்.
சென்னை, பிப். 1: கூவம் நதிக்கரையை அழகுபடுத்தும் வகையில் சிவானந்தா சாலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் விரைவில் பூங்கா அமைக்கப்படும் என்று துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
சிவானந்தா சாலையில் கூவம் நதிக்கரையோரப் பகுதிகளை ஆய்வு செய்து பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான இடத்தை, பூங்கா அமைக்கும் பணிகளுக்காக மாநகராட்சியிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் அவர் திங்கள்கிழமை பங்கேற்றார்.
இதன்பின் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
அடையாறு, பக்கிங்ஹாம், கூவம் ஆகிய நீர்வழித் தடங்களை சீரமைக்க அரசு ஏற்கெனவே உயர் நிலைக் குழுவை அமைத்துள்ளது.
இந்தக் குழுவின் முதலாவது கூட்டத்தில், கூவம் நதியைச் சீரமைக்கும் திட்டம் குறித்த ஒருமித்த திட்ட அறிக்கையைத் தயாரிக்கவும், திட்ட செயலாக்கத்தின் போது தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளைப் பெறவும் சிங்கப்பூர் அரசு நிறுவனத்துடன் விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது.
கூவம் சீரமைப்புத் திட்டத்தின் அடுத்தகட்டமாக சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டை பகுதிகளில் மோட்டார் உதிரிபாகங்கள் விற்கும் கடைகள், சிறு ஆலைகளை மறைமலை நகருக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுப்பேட்டை பகுதியில் ரூ. 1.27 கோடியில் பூங்கா பணிகள்: புதுப்பேட்டை லாங்ஸ் கார்டன் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, பூங்காக்கள் மாநகராட்சி சார்பாக அமைக்கப்பட உள்ளன.
இந்தப் பகுதியில் கூவம் நதிக்கரையோரம் ரூ. 1.27 கோடியில் பூங்கா அமைக்கும் பணிகள் இப்போது நடைபெறுகின்றன.
இப்போது சிவானந்தா சாலையில் அண்ணா சாலை முதல் காமராஜர் சாலை வரை 1100 மீட்டர் நீளம், 5 மீட்டர் அகல பரப்பில் பூங்கா அமைக்க மாநகராட்சிக்கு நிலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கொசு ஒழிப்புப் பணி: முக்கிய நீராதாரங்களில் கொசு ஒழிப்புப் பணிகளுக்காக 9 படகுகளில் சென்று கொசுப் புழுக்கள், லார்வாக்களை ஒழிக்கும் வகையில் மருந்து தெளிக்கப்படுகிறது.
இந்தப் பணிக்காக மாநகராட்சி பள்ளிகளைச் சேர்ந்த 5 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு சுகாதாரத் தூதுவர் அட்டைகள் வழங்கப்பட்டு, கொசு ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கொசு ஒழிப்புப் பணியில் மாநகராட்சியின் 1,200 ஊழியர்கள் புகை பரப்பிகள், தெளிப்பான்கள் உதவியுடன் தினமும் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் எல்லா போராட்டங்களையும் ஜெயலலிதா நடத்திய பின்னர் இப்போது கடைசியாக கொசு ஒழிப்புப் போராட்டத்துக்கு வந்துள்ளார் என்றார் ஸ்டாலின்.
இதில் மாநகர மேயர் மா. சுப்பிரமணியன், பொதுப்பணித்துறை முதன்மைச் செயலர் எஸ். ராமசுந்தரம், கூவம் சீரமைப்புப் பணிகளுக்கான ஒருங்கிணைப்பு அலுவலர் பனீந்தரரெட்டி, துணை முதல்வரின் செயலாளர் கே. தீனபந்து, மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.