தினமலர் 23.04.2010
கேட்பாரற்று திரியும் கால்நடைகள் மகளிர் குழுக்களிடம் ஒப்படைப்பு
திண்டுக்கல்:”திண்டுக்கல்,பழநியில் ரோடுகளில் கேட்பாரற்று அனாதையாக திரியும் கால்நடைகளை, மகளிர் சுய உதவி குழுக்களிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என கலெக்டர் வள்ளலார் பேசினார்.பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு பொது மக்களால் காணிக் கையாக கொடுக்கப்பட்ட கால்நடைகள் கோசாலைகள் அமைத்து பராமரிக்கப்பட்டு வந்தன. இவற்றை இலவசமாக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கும் விழா, கள்ளிமந்தையம் கோசாலையில் நடந்தது. கலெக்டர் வள்ளலார் பேசுகையில், அரசு வீட்டு வசதி திட்டத்தின் கீழ், குடிசை வீடுகள் கணக் கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 32 ஆயிரம் குடிசை வீடுகள் கண்டறியப் பட்டுள்ளன.மாவட்டத்தில் பெண் கள் வாழ்க்கை, பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில் ஆயிரத்து 200 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது கோவிலுக்கு வழங்கப்பட்ட கால்நடைகள் மூலம் வாழ்க்கையில் முன்னேறு வதற்கான மற்றொரு வழி கிடைத் துள்ளது. இது தவிர திண்டுக்கல், பழநி ரோடுகளில் அனாதையாக திரியும் கால்நடைகள், பராமரிப்புத்துறை மற்றும் பிராணிகள் வதை தடுப்பு அமைப்புகள் மூலமும் பறிமுதல் செய்யப்படும். இவற்றை மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.
விழாவில் 291 பேருக்கு கால்நடைகள் வழங்கப்பட்டன. பழநி கோயில் அறங்காவலர்கள் நாகராஜன், இந்திரா ரவிச்சந்திரன், இணை ஆணையர் ராஜமாணிக்கம், உதவி ஆணையர் நடராஜன், முன் னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் ராஜாமணி, திட்ட அலுவலர்(மகளிர்) ரெங்கநாதன், ஒட்டன்சத்திரம் தாசில்தார் பஷீர்அகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.