தினமணி 6.11.2009
கொசுக்களை ஒழிப்பதற்கான இயந்திரம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
திண்டுக்கல், நவ.5: திண்டுக்கல் மாவட்டத்திற்கு தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை சார்பில் ரூ. 12 லட்சம் மதிப்பிலான கொசுக்களை ஒழிக்கும் ராட்சச புகை போக்கி இயந்திரம் வழங்கி உள்ளது.
திண்டுக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இயந்திரத்தைத் தொடங்கி வைத்து ஆட்சியர் பேசியதாவது:
இந்த புகைபோக்கி இயந்திரம் ஒரு மணி நேரத்தில் 12 ஆயிரம் மக்கள் தொகை உள்ள பகுதியில் உள்ள வளர்ச்சியடைந்த கொசுக்களை முற்றிலும் அழித்து விடும்.
இதன் மூலம் வரும் புகை 30 அடி உயரத்துக்குச் செல்லும். இதன் மூலம் டெங்கு, மூளைக்காய்ச்சல், சிக்–குன் குனியா, பன்றிக் காய்ச்சல் போன்ற நோய்களைப் பரப்பும் கொசுக்களை அழிக்க பயன்படுத்தப்படும்.
இயந்திரம் ஒரு மணி நேரத்திற்கு இயக்குவதற்கு ரூ. 8,500 செலவிடப்படும். டீசல், பைரீத்ரம், பெட்ரோல் கலவைகள் பயன்படுத்தப்படுகின்றது என்றார்.
நிகழ்ச்சியில் துணை சுகாதார இயக்குநர் ஜெகதீஸ்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலர் க. அருண்மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.