கொசுக்களை கொல்லும் வலை
நீர்வழிப் பாதைகளில் வசிக்கும் மக்களுக்கு கொசுக்களை கொல்லும் வகையிலான கொசு வலைகளை வழங்க சென்னை மாநகராட்சி பரிசீலித்து வருகிறது.
சென்னை மாநகராட்சியில் நீர்வழிப் பாதைகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு இலவச கொசு வலைகள் வழங்கப்படும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் மேயர் சைதை துரைசாமி அறிவித்திருந்தார். அதன்படி, மாநகராட்சி சார்பில் கொசு வலைகள் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. மேலும், கொசு வலைகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் மாதிரி கொசு வலைகளை மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்படைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கொசு வலையின் மீது கொசுக்கள் அமர்ந்தவுடன் அவை இறக்கும் வகையிலான கொசு வலைகளை வழங்க இப்போது பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த வகையிலான கொசு வலைகளை தயாரித்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கொசுக்களால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில் நீர்வழிப் பாதைகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கு இலவச கொசு வலைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த கொசு வலைகளை தயாரித்து வழங்க நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மேலும் கொசு வலைகள் பெறுவதற்கான தகுதியுடைய பயனாளிகள் குறித்த கணக்கெடுப்பும் நடைபெற்று வருகிறது.
ஆப்பிரிக்காவில் உள்ளது போல: ஆப்பிரிக்காவில் உள்ள பல்வேறு நாடுகளில் கொசுக்களை கொல்லும் வகையிலான கொசு வலைகள் வழங்கப்படுகின்றன. இந்த வலைகளில் உள்ள ஒருவித ரசாயனப் பொருள் கொசுக்கள் அமர்ந்தவுடன் அவற்றை கொன்று விடும். இந்த கொசு வலைகளுக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் அளித்துள்ளது.
அதே போன்ற கொசு வலைகளை சென்னையில் உள்ள நீர்வழிப் பாதைகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த கொசு வலைகளை தயாரிக்க ஆகும் செலவு, எத்தனை கொசு வலைகள் தயாரிக்கப்பட வேண்டும் என்பன போன்ற தகவல்களை மாநகராட்சி அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். தமிழக அரசின் அனுமதியுடன் இந்த திட்டம் நிறைவேற்றப்படும்.
ஆய்வு செய்ய தனிக் குழு: நீர்வழிப் பாதைகளில் வசிக்கும் மக்கள் குறித்த கணக்கெடுப்பு இன்னும் முடிக்கப்படவில்லை. இந்த கணக்கெடுப்பை மேற்கொள்ளவும், கொசு வலைகளின் தரம் மற்றும் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்யவும் தனியாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் மாநகராட்சியின் உயரதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் கணக்கெடுப்பு மட்டுமல்லாமல், கொசு வலைகளை இலவசமாக வழங்குவதால் ஏற்படும் செலவினம் குறித்தும் ஆய்வு செய்வார்கள். விரைவில் இந்த கொசு வலைகள் வழங்கும் பணிகள் தொடங்கும், என்று அந்த அதிகாரி கூறினார்.