தினமலர் 20.01.2010
கொசு உற்பத்தியை தடுக்க ‘ஆயில் பந்து‘
ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் கொசு உற்பத்தியை தடுக்க “ஆயில் பந்து‘ எனும் புதிய முறையை கையாண்டு வருகின்றனர். ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் கடந்த சில நாட்களாக கொசு தொல்லை அதிகளவில் காணபடுகிறது. மாலை 6 மணிக்கு மேல் ரோட்டில் இரு சக்கர வாகனங்களில் செல்ல முடியாத அளவு, முகத்தில் கொசுக்கள் வந்து அடிக்கும் நிலையில் பலரும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். நகராட்சி பகுதியில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில், நகராட்சி நிர்வாகம் புதிய முறையை கையாண்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக கொசு உற்பத்தியை தடுக்க, மரத்தூள்களை துணியில் கட்டி, பந்துபோல் உருவாக்கி குருடு ஆயிலில் குறைந்தது 10 மணி நேரம் ஊற வைத்து, கொசு உற்பத்தி செய்யும் குளம் குட்டைகளில் போட்டுவிடுகின்றனர். நன்கு ஊறிய ஆயில் பந்தால் கொசுக்கள் மூச்சு திணறி இறப்பதுடன் உற்பத்தியும் முற்றிலும் தடுக்கப்படுகிறது . நகராட்சி கமிஷனர் முஜ்புர்ரஹ்மான் கூறியதாவது: நகராட்சி பகுதியில் பயன்பாடு இல்லாத குளம் குட்டைகளில் , இதுபோன்ற ஆயில் பந்துகளை போட்டுள்ளோம். இதன்மூலம் கொசு உற்பத்தி தடுக்கப்படும். மேலும் முக்கிய வீதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணியும் நடந்து வருகிறது,என்றார்.