தினகரன் 20.05.2010
கொசு உற்பத்தியை தடுக்க ஐஐடி உதவி கேட்டு மாநகராட்சி கடிதம்
புதுடெல்லி, மே 20: மழைநீர் வடிகால்களில் கொசு உற்பத்தியை தடுக்க தேவையான தீர்வுகளை தரும்படி டெல்லி ஐ.ஐ.டி.க்கும், இன்ஜினியரிங் கல்லூரிக்கும் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி கடிதம் எழுதியுள்ளார்.
டெல்லியில் முக்கிய சாலைகளின் இருபுறங்களிலும் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன. மழைக்காலங்களில் சாலையில் தேங்கும் மழைநீர், தெருக்கள், வாகன நிறுத்தங்கள் போன்றவற்றில் இருந்து வரும் மழைநீர் இந்த வடிகால்கள் மூலம்தான் வெளியேற்றப்படுகிறது.
மழைக்காலங்களில் இந்த வடிகால்களில் தண்ணீர் தேங்கி நிற்கும். அப்போது இவை கொசுக்களின் உற்பத்தி இடங்களாக மாறிவிடுகின்றன. கொசுக்கள் உற்பத்தி அதிகரிக்கும்போது, அவை மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் பரவுகின்றன. இந்நிலையில் அடுத்து வரும் மழைக்காலத்தில் வடிகால்களில் கொசு உற்பத்தியை தடுக்க என்னென்ன மாற்றங்கள் செய்யலாம், நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து ஆலோசனை தரும்படி ஐ.ஐ.டி. மற்றும் டெல்லி இன்ஜினியரிங் கல்லூரி ஆகியவற்றுக்கு மாநகராட்சி சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி என்.கே.யாதவ் கூறுகையில், ‘’மழைநீர் வடிகால்களில் உள்ள மூடிகள் ஒரு நபரால் தூக்க முடியாது. மேலும், மழைக்காலங்களில் அதை திறந்தாலும் தண்ணீர் நிரம்பி இருக்கும் என்பதால், அவற்றில் கொசு மருந்தை தெளிக்க முடியாது. இதனால்தான் ஐ.ஐ.டி. மற்றும் இன்ஜினியரிங் கல்லூரி உதவியை கேட்டுள்ளோம்” என்றார்.