தினமணி 21.06.2013
தினமணி 21.06.2013
கொசு ஒழிப்புக்கு நொச்சி செடிகளை பயன்படுத்த மாநகராட்சி முடிவு
கொசுக்களை அழிக்க 10 லட்சம் நொச்சிச் செடிகளை வளர்க்கவும், வீடுகளுக்கு வழங்கவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னையில் உள்ள பக்கிங்காம் கால்வாய், கூவம் ஆறு, விருகம்பாக்கம் ஆறு,
கேப்டன் காட்டன் கால்வாய், ஓட்டேரி, அம்பத்தூர் உபரி ஏரி உள்ளிட்ட
இடங்களில் உற்பத்தியாகும் கொசுக்களை ஒழிப்பதற்கு ரூ.6.3 கோடி செலவில்
தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கொசு ஒழிப்புப் பணிகளை தீவிரப்படுத்தும் விதமாக மாநகராட்சியின் 15
மண்டலங்களிலும் 10 லட்சம் நொச்சி செடிகளை நட்டு, வளர்க்கத்
திட்டமிட்டுள்ளது. அதன்படி, முதல்கட்டமாக 3 அடி உயரம் கொண்ட 5 லட்சம்
செடிகளை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.
இதில் 3 லட்சம் நொச்சி செடிகளை நீர்வழித் தடங்களில் நட்டு 6 மாத
காலத்துக்குப் பராமரிக்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. மீதமுள்ள 2 லட்சம்
நொச்சி செடிகளை வீடுகளுக்கு விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டள்ளது.