மாலை மலர் 22.01.2014

சென்னை, ஜன. 22 – சென்னை மாநகராட்சி
சார்பில் விலையில்லா கொசு வலை வழங்கப்படுகிறது. கூவம் ஆற்றோரம்
குடியிருப்பவர்களுக்கு மட்டுமின்றி பச்சை நிற ரேஷன் கார்டு வைத்துள்ள
அனைவருக்கும் இந்த கொசு வலை வினியோகம் செய்யப்படுகிறது.
ரூ. 400
மதிப்புள்ள கொசு வலை கொசுக்களிடம் இருந்து பாதுகாத்து கொள்ளவும்,
கொசுக்களால் ஏற்படும் டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா, டைபாய்டு போன்ற
காய்ச்சலில் இருந்து தப்பிக்கவும் வழங்கப்படுகிறது.
அனைத்து
வார்டுகளிலும் மாநகராட்சி அலுவலகங்களுக்கு நேரில் சென்று பெற்றுக் கொள்ள
வேண்டும். ஆனால் 34–வது வார்டுக்கு உட்பட்ட கொடுங்கையூர் பகுதியில்
மக்களுக்கு நேரடியாக கொசு வலைகள் வழங்கப்படுகின்றன.
ரேஷன் கார்டில்
உள்ள குடும்ப உறுப்பினரிடம் கையெழுத்து பெற்றுக் கொண்டு ஒவ்வொரு வீடு வீடாக
சென்று கவுன்சிலரும் நிலைக்குழு தலைவருமான லட்சுமி நாராயணன் வழங்கி
வருகிறார். 10 ஆயிரம் வீடுகளுக்கு கொசு வலைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து லட்சுமி நாராயணன் கூறியதாவது:–
மக்களிடம்
நேரில் சென்று ஒட்டு கேட்க மட்டும் போகக்கூடாது. அரசின் நலத்திட்டங்களை
நேரில் கொண்டு போய் கொடுப்பதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார்கள்.
34–வது வார்டை பொறுத்தவரை ஒவ்வொரு வீடு வீடாக சென்று முதல்–அமைச்சர் வழங்கிய விலையில்லா கொசு வலைகளை வழங்கி வருகிறோம்.
இதே போல அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் நேரடியாக வீட்டிற்கே சென்று கொடுப்பதனால் அவர்கள் அலைக்கழிக்கப்படாமல் பயன் அடைகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.