கொடைக்கானலில் தைலக் கடைகளில் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு
கொடைக்கானலில் நீதிமன்ற உத்தரவின்படி, தைலக் கடைகளில் நகராட்சி மற்றும் மருத்துவர்கள் பரிசோதனை நடத்தி, தைலப் பாட்டிகளை பறிமுதல் செய்தனர்.
கொடைக்கானலில் தைலக் கடைகளிலும், மருந்துக் கடைகளிலும் மூட்டு வலி, தலை வலி,மற்றும் உடல் வலிக்குத் தேவையான தைலங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், வின்டர் கிரீன் என்ற தைலத்தை சிலர் குடித்து இறந்து வருகின்றனர். தற்கொலை செய்வதற்கும் இந்த ஆயிலை பயன்படுத்தி வருகின்றனராம்.
இது குறித்து, கொடைக்கானலைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், மதுரை உயர் நீதி மன்றத்தில் நுகர்வோர் பாதுகாப்பு மன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதில், கொடைக்கானல் பகுதிகளில் உள்ள கடைகளில் வின்டர் கீரின் என்ற தைலம் போலியாக விற்பனை செய்யப்படுகிறது. அதில், மருந்து கலவைகள், காலாவதி தேதி என்பன போன்ற எந்தவித விவரமும் இல்லை என்றும், தரமற்ற முறையில் தயார் செய்து விற்பனை செய்து வருவதால் பலர் இறந்துவிட்டதாகவும், எனவே இந்தத் தைலத்தை பரிசோதனை செய்து தடை செய்ய வேண்டுமெனவும் குறிப்பிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து, நீதிமன்றம் உத்தரவின்பேரிலும், மாவட்ட ஆட்சியர் அறிவுரையின்படியும், கொடைக்கானல் நகராட்சி ஆணையர் சாகுல்ஹமீது முன்னிலையில், வியாழக்கிமை கொடைக்கானல் பகுதிகளான பாம்பார்புரம், ஏரிச்சாலை,
லாஸ்காட் சாலை, அண்ணாசாலை உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள தைலக் கடைகளில் பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது, 100-க்கும் மேற்பட்ட வின்டர் கிரீன் ஆயில் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதில், மாவட்ட மருந்தாளுர் ஆய்வாளர் புகழேந்தி, நகர்நல அலுவலர் டாக்டர் ராம்குமார், அரசு மருத்துவனை சித்தா மருத்துவர் மாரியப்பன், சுகாதார ஆய்வாளர்கள் அசன், சாமுவேல், தங்கபாண்டியன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இது குறித்து, நகர்நல அலுவலர் கூறியது: நுகர்வோர் நீதிமன்ற உத்தரவின்படி, கொடைக்கானலில் உள்ள தைலக் கடைகளில் பரிசோதனை மேற்கொண்டு 100-க்கும் மேற்பட்ட வின்டர் கிரீன் தைலப் பாட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன, இவை சென்னை கிண்டியிலுள்ள பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பப்பட உள்ளது என்றார்.