தினமலர் 31.03.2010
கொரடாச்சேரி பேரூராட்சி தேர்தல்:வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்
திருவாரூர்:கொரடாச்சேரி பேரூராட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் இன்று முதல் (31ம் தேதி) வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று கலெக்டர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கொரடாச்சேரி பேரூராட்சி மன்றம் கலைக்கப்பட்டதை அடுத்து புதிதாக தேர்தல் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும் போட்டியிட விரும்புபவர்கள் இன்று முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம். காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படும். வேட்பு மனுதாக்கல் செய்ய வரும் 7ம் தேதி கடைசி நாளாகும். பின்னர் 8ம் தேதி காலை 11 மணிக்கு வேட்பு மனு பரிசீலனை நடக்கும். 10ம் தேதி மதியம் 3 மணி வரை வேட்பு மனுவை வாபஸ் பெற்றுக்கொள்ளலாம். வரும் 19ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும். தொடர்ந்து 21ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கும். 22ம் தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும். புதிய உறுப்பினர்களுக்கு 24ம் தேதி பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படும். வார்டு உறுப்பினர்களுக்கான முதல் கூட்டம் மற்றும் தலைவர், துணைத்தலைவர் ஆகியோர் தேர்வு 30ம் தேதி நடக்கும்.
கொரடாச்சேரி பேரூராட்சியில் 1,6,12 ஆகிய 3 வார்டுகள் ஆதிதிராவிடர் (பொது) பிரிவினருக்கும், 3,9 ஆகிய வார்டுகள் ஆதிதிராவிட பெண் பிரிவினருக்கும், 8,13,15 ஆகிய வார்டுகள் இதர பெண்கள் பிரிவினருக்கும், 2,4,5,7,10,11,14 ஆகிய வார்டுகள் இதர பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொரடாச்சேரி பேரூராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை அதே அலுவலகத்தில் நடக்கும். இந்த தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் கடந்த 29ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது