தினமணி 08.10.2010
கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் மேம்பாலம் ஜனவரியில் திறக்கப்படும்: மேயர் தகவல்
சென்னை, அக்.7: கோடம்பாக்கம் ரங்கராஜபுரத்தில் ரூ.23.76 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம், 2011 ஜனவரியில் திறக்கப்படும் என்று மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சியும், ரயில்வே துறையும் இணைந்து ரங்கராஜபுரத்தில் மேற்கொண்டு வரும் மேம்பாலப் பணியினை மேயர் மா.சுப்பிரமணியன் வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியது:
2006-ம் ஆண்டுக்குப் பிறகு சென்னை மாநகராட்சி சார்பில் 6 மேம்பாலங்கள், ஒரு சுரங்கப்பாதை ஆகியவை ரூ.134.87 கோடியில் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளன.
சென்னை நகரில் மேலும் 10 இடங்களில் பாலங்கள், சுரங்கப்பாதைகள் கட்டப்பட்டு வருகின்றன. கோடம்பாக்கம் ரங்கராஜபுரத்தில் ரூ.23.76 கோடி செலவில் மேம்பாலம் கட்டும் பணியினை சென்னை மாநகராட்சியும், ரயில்வே துறையும் இணைந்து மேற்கொண்டு வருகிறது. “ஒய்‘ வடிவமைப்பில் கட்டப்பட்டு வரும் இந்தப் பாலம், இரு வழி வாகனப் போக்குவரத்துக்கு ஏற்றவாறு கட்டப்படுகிறது.
ரயில்வே தடத்தின் மீது கட்டப்படும் மேல் தளம் சுமார் 1,500 டன் எடை தாங்கும் வகையில் நவீன வகையில் வடிவமைக்கப்படுகிறது. இப்பாலம் திறக்கப்படும்போது கோடம்பாக்கம், ரங்கராஜபுரம், தியாகராய நகர், மாம்பலம் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.
மேம்பாலப் பணிகள் டிசம்பரில் முடிக்கப்பட்டு, 2011 ஜனவரியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும் என்றார் மா.சுப்பிரமணியன். இந்த ஆய்வின்போது, துணை மேயர் ஆர்.சத்தியபாமா, துணை ஆணையர் (பணிகள்) தரேஸ் அகமது உள்ளிட்டோர் உடனிருந்தனர்.