தினமணி 29.04.2010
கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மாநகராட்சி இடங்களில் ஆக்கிரமிப்பு
திருச்சி, ஏப். 28: கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மாநகராட்சிச் சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன என்று திருச்சி மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் உறுப்பினர்கள் ஆவேசமடைந்தனர்.
திருச்சி மாநகராட்சி மாமன்ற அவசர மற்றும் சாதாரணக் கூட்டங்கள் புதன்கிழமை நடைபெற்றன. கூட்டங்களுக்கு மேயர் எஸ். சுஜாதா தலைமை வகித்தார். ஆணையர் த.தி. பால்சாமி, துணை மேயர் மு. அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:
ரெ. ஸ்ரீராமன் (இந்திய கம்யூ.): பொன்மலைக் கோட்டத்தைச் சேர்ந்த கொட்டப்பட்டு கிராமத்தில் பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட 91,200 சதுர அடி நிலத்தில் அனுமதியின்றி மனைகளாக்கியவர்கள், இப்போது இதற்கு ஈடாக எடுத்துக் கொண்ட அளவுக்கும் குறைவாக நிலத்தைத் தர முன்வருகிறார்கள். இதற்கான பொருளை ஒத்திவைக்க வேண்டும்.
ஜெ. சீனிவாசன் (அதிமுக): இதுபோல, குப்பை கொட்டி வந்த இடங்கள், பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களை எல்லாம் பலரும் ஆக்கிரமித்துவிட்டனர். பறிபோகிவிட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடங்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்ய வேண்டும்.
அப்துல்லா (சுயே.): எனது வார்டில் மாநகராட்சிக்குச் சொந்தமான 9000 சதுர அடி இடத்தில் மக்கள் குப்பை கொட்டி வந்தனர். இப்போது அந்த இடம் யாரிடம் இருக்கிறது? மாநகராட்சி அதிகாரிகளுக்குத் தெரியுமா?
கிருஷ்ணமூர்த்தி (அதிமுக): சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் ஒரு வணிக வளாகத்துக்கு அருகே, மாநகராட்சிக்குச் சொந்தமான 2,400 சதுர அடி நிலத்தில் இப்போது தனியார் வாகன நிறுத்தம் இருக்கிறது. யார் கொடுத்தது? யார் வாங்கியது?
து. தங்கராஜ் (இந்திய கம்யூ.): உறையூர் பாத்திமாநகரில் பொது இடத்தில் பிளாட் போட்டு விற்பனை செய்துள்ளனர். இதுதொடர்பாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரெ. அறிவுடைநம்பி (திமுக): மாநகராட்சியில் முன்னாள் பொறியாளராக இருந்த ஒருவர் நமது இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்.
ஓராண்டாகியும் வழக்கை முடிக்கவில்லை. இருபுறமும் கழிவுநீர்க் கால்வாய் அமைத்தும் பயனின்றி இருக்கிறது. மாநகராட்சி வழக்குரைஞர்கள் என்ன செய்கிறார்கள்?
ஜெ. சீனிவாசன் (அதிமுக): மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்துகொண்டு, உள்ளே நுழையக் கூடாது என நம் அதிகாரிகளுக்கு உத்தரவிடுவதுதான் இப்போதைய “ஃபேஷன்’.
ஒவ்வொரு பகுதியிலும் மாநகராட்சி அதிகாரிகள் இவற்றை கவனிக்க வேண்டும். தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எஸ். பாலமுருகன் (திமுக): எனது வார்டில் எம்.பி. நிதியிலிருந்து ரேஷன் கடை கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. அதற்கு ஒருவர் நீதிமன்றத்தில் தடையாணை பெற்றிருந்தார்.
பல ஆண்டுகளாகியும் இதற்கு மாநகராட்சி நிர்வாகம் எடுத்த நடவடிக்கை என்ன?
ஜெ. செந்தில்நாதன் (காங்.): சத்திரம் பேருந்து நிலையப் பகுதியில் குடிநீர் தொட்டிக்கு கீழே கடைகள் கட்டும் பணி இன்னும் ஏன் முடியவில்லை.
ஓராண்டுக்கும் மேலாகிவிட்டது. விரைந்து அவற்றைத் திறக்க வேண்டும். மாநகராட்சிக்கு வருமானம் வரும் இனங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
ஓட்டுநர்கள் வேண்டும்!
இரா. மூக்கன் (திமுக): மாநகராட்சியில் 45 ஓட்டுநர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகக் கூறுகிறீர்கள்.
ஓட்டுநர்கள் இல்லாமல் வாகனங்களை வாங்கி என்ன செய்வது? காலியிடங்களை நிரப்ப வேண்டும்.
மு. வெங்கட்ராஜ் (சுயே.): 5 ஓட்டுநர்களை அரசுப் போக்குவரத்துக் கழகத்திலிருந்து பணியமர்த்த ஆண்டுக்கு ரூ. 7 லட்சம் வரை செலவாகிறது.
இதற்கு மாநகராட்சியிலேயே ஓட்டுநர் பணியிடங்களை நிரப்பலாமே?
ஆணையர் த.தி. பால்சாமி: காலியிடங்களை நிரப்புவது தொடர்பாக அனைத்து மாநகராட்சியிலிருந்தும் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.
நந்திகோவில் தெருவில்
மீண்டும் வாகன நிறுத்தம்
த. குமரேசன் (திமுக): தெப்பக்குளம், நந்திகோவில் தெருவில் ஏற்கெனவே இருந்த வாகன நிறுத்தத்தைத் தொடரச் செய்ய வேண்டும். தரைக்கடை வியாபாரிகளுக்கு அங்கே இடம் அளிக்கக் கூடாது. இதுதொடர்பாக மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். (இந்தத் தீர்மானத்தை காங். உறுப்பினர் இரா. ஜவஹர் வழிமொழிவதாகக் கூறினார்.)
பள்ளிகளில் காலை உணவு
ரெ. ஸ்ரீராமன் (கம்யூ): சில மாநகராட்சிப் பள்ளிகளில் இப்போது நன்கொடையாளர்களின் உதவியுடன் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. நன்கொடையாளர்கள் தவறினால் நிறுத்தப்படுகிறது. எனவே, மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர்களை அதிகமாகச் சேர்க்க, ஏழை, எளிய மக்களின் குழந்தைகளைப் படிக்க வைக்க, மாநகராட்சி கல்வி நிதியிலிருந்து காலை உணவு வழங்க வேண்டும்.
(இதற்கான தீர்மானத்தை இந்திய கம்யூ. உறுப்பினர்கள் ஸ்ரீராமன், து. தங்கராஜ், வை. புஷ்பம் ஆகியோர் கையெழுத்திட்டு மேயரிடம் அளித்தனர். கோவை மாநகராட்சியில் இதுபோன்ற திட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும், அரசுக்கு இதை அனுப்பிவைத்து அனுமதி பெற்று செயல்படுத்தலாம் என்றும் ஆணையர் பால்சாமி பதிலளித்தார்).