தினத்தந்தி 30.10.2013
கோபியில் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு இருந்த கடைகள் அகற்றம் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
கோபியில் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு இருந்த கடைகளை அகற்றி நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
போக்குவரத்து நெரிசல்
கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்கு உள்பட்ட அரசு ஆஸ்பத்திரி ரோடு, தினசரி
மார்க்கெட் பகுதிகளில் சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டு உள்ளதால்
போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது.
அதைத்தொடர்ந்து, அரசு ஆஸ்பத்திரி ரோடு, தினசரி மார்க்கெட் ஆகிய
பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளுமாறு கடந்த 10 நாட்களுக்கு
முன்பு நகராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமையாளர்களுக்கு
எச்சரிக்கை விடுத்தனர்.
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
தாங்களாகவே முன்வந்து சில கடைக்காரர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்
கொண்டனர். இந்தநிலையில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை
அகற்றுமாறு அதிகாரிகளுக்கு கோபிசெட்டிபாளையம் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு)
கிருஷ்ணக்குமார் உத்தரவிட்டார்.
அதன்பேரில் அதிகாரிகள் அரசு ஆஸ்பத்திரி ரோடு, தினசரி மார்க்கெட்
பகுதிகளில் நேற்றுக் காலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு இருந்த பால் கடைகள்,
டீக்கடைகள், காய்கறி கடைகள் உள்ளிட்ட கடைகளை அதிகாரிகள் அகற்றினார்கள்.
அதிகாரிகள் எச்சரிக்கை
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “கோபி நகராட்சி பகுதிகளில்
போக்குவரத்து நெரிசல்களை தவிர்ப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு உள்ள
கடைகள் அகற்றப்பட்டு வருகின்றன. நகராட்சி பகுதிகளில் சாலையை ஆக்கிரமித்து
கடைகள் அமைத்தால், அந்த கடைகள் அகற்றப்படும். மேலும், சம்பந்தப்பட்ட
கடைகளில் உள்ள பொருட்களும் பறிமுதல் செய்யப்படும்“ என்றனர்.