தினமணி 31.08.2009
கோபி நகராட்சியில் குடிநீர் புதிய திட்டப் பணிகள்
கோபி, ஆக. 30: கோபி நகராட்சியில் ரூ.4 கோடியே 69 லட்சம் செலவில் குடிநீர் அபிவிருத்தி திட்டத்தில் புதிய குடிநீர் திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
கோபி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கு நஞ்சை புளியம்பட்டி பவானி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு சுத்திகரிப்பு செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.
கோபியில் உள்ள 4 மேல் நிலை நீர்தொட்டிக்கு ஏற்றப்பட்டு 50 லட்சம் லிட்டர் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக மெயின் பைப் குழாய்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பே பதிக்கப்பட்டு இருப்பதால் சில இடங்களில் பைப் பழுதாகி உடைந்து தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது.
இதனால் கோபி நகராட்சி சார்பில் ரூ.4.69கோடி மதிப்பில் புதிய குழாய்கள் அமைத்து தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யும் பணி தொடங்கி நடந்து வருகிறது. தற்போது புதியதாக கட்டப்பட்டுள்ள மொடச்சூர் வீட்டுவசதி வாரியத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு குடிநீர் குழாய் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
கோபி நகரில் வீதிகளில் உள்ள குழாய்கள் மாற்றப்பட்டு விட்டன. இதைத் தொடர்ந்து பவானி ஆற்றில் இருந்து கோபி–சத்தி ரோட்டில் உள்ள குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டிக்கு தண்ணீர் கொண்டு வரப்படும் பிரதான குழாய்களில் உள்ள பழுதுகள் சரி செய்யப்படவுள்ளன.
இந்த பணி திங்கள்கிழமை தொடங்கி சுமார் 30 நாள்கள் நடைபெறும். இதனால் நகராட்சியின் சார்பில் வழங்கப்படும் குடிநீர் அளவு குறைந்த அளவில் வழங்கப்படும்.
எனவே நகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் வழங்கப்படும் குறைந்த அளவு தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று நகராட்சி தலைவர் ரேவதிதேவி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.