தினமலர் 18.11.2010
கோபி நகராட்சியில் சிறப்பு கூட்டம்
கோபிசெட்டிபாளையம்
: இரண்டு மாதமாக எந்த தீர்மானமும் நிறைவேறாத நிலையில் இன்று காலை கோபி நகராட்சி சிறப்பு கூட்டம் நடக்கிறது. தமிழக சிறப்பு சாலைகள் திட்டத்தின் கீழ் கோபி நகராட்சி பகுதியில் உள்ள 30 வார்டுகளில் 18 வார்டுகளில் மட்டும் சாலைகள் அமைக்க நான்கு கோடியே 56 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நகராட்சி தலைவர் மற்றும் அதிகாரிகள் செய்த குளறுபடியால், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வார்டுகளுக்கே அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறி தி.மு.க., மற்றும் காங்., கவுன்சிலர்கள் சென்ற செப்டம்பர் 29ம் தேதி நடந்த கூட்டத்தில் தீர்மானங்களை ஒத்தி வைக்ககோரினர். இதனால் ஏற்பட்ட அமளியில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை.சென்ற மாதம் 28ம் தேதி நடந்த கூட்டத்தில் நான்கு கோடியே 59 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் செய்யப்பட்டு வரும் குடிநீர் திட்டப்பணிகளில், ஊழல் நடந்திருப்பதாக கூறி தி.மு.க., காங்., கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சென்ற கூட்டத்திலும் தீர்மானங்கள் நிறைவேறவில்லை. இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு நகராட்சி சிறப்பு கூட்டம் நடக்கிறது. இன்றைய கூட்டத்தில் ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்ட சிறப்பு சாலைகள் குறித்த தீர்மானம் மட்டுமே இடம் பெற்றுள்ளது. “தி.மு.க., காங்., கவுன்சிலர்கள், சிறப்பு சாலைகள் குறித்து தமிழக அரசு ஒதுக்கிய நிதியை அனைத்து வார்டுகளுக்கும் பிரித்து வழங்க வேண்டும்‘ என கடந்த இரண்டு கூட்டத்திலும் கோரிக்கை வைத்து, உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். ஆனால் பணிகள் அனைத்து வார்டுகளுக்கும் பிரித்து வழங்கப்படவில்லை. இதனால் தி.மு.க., காங்., கவுன்சிலர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். இன்று நடக்கவுள்ள நகராட்சி சிறப்பு கூட்டத்துக்கு, நேற்று மாலைதான் தீர்மான நகல்கள் கவுன்சிலர்களுக்கு அனுப்பபட்டது. தீர்மானங்களை ஒத்திவைப்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த முடியாமல் தி.மு.க., மற்றும் காங்., கவுன்சிலர்கள் தவித்தனர்.