கோவில்பட்டி கடைகளில் மாம்பழங்கள்பறிமுதல்: அதிகாரிகள் நடவடிக்கை
கோவில்பட்டி நகராட்சி தினசரிச் சந்தை மற்றும் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கடைகளை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு செய்தனர்.
அப்போது ரசாயனம் மூலம் பழுக்கவைத்த மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தூத்துக்குடி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் காமாட்சி கணேசன், வட்ட வழங்கல் அலுவலர் மணிகண்டன், மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் நகராட்சி சுகாதார அலுவலர் ராஜசேகரன், சுகாதார ஆய்வாளர்கள், தொழிலாளர் துணை ஆய்வாளர் சொக்கலிங்கம், உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, தனி வட்டாட்சியர் வீராசாமி மற்றும் ஊழியர்கள் கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்தை மற்றும் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கடைகளை ஆய்வு செய்தனர். இதில், நகராட்சி தினசரி சந்தையில் உள்ள மாம்பழ குடோன்களை தணிக்கை செய்ததில் கார்பைடு ரசாயன கல் மூலம் பழுக்க வைக்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. அந்த மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுபோல, கடைகளில் ஆய்வு செய்ததில் அங்கீகரிக்கப்பட்ட நிறம் உபயோகிக்கப் படுத்தப்படாமல் தயாரிக்கப்பட்ட 100 கிலோ அப்பளங்கள், காலாவதியான சுமார் 25 கிலோ தரமற்ற உணவுப் பொருள்களும் கைப்பற்றப்பட்டு, அழிக்கப்பட்டன.
பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்: பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை ஆய்வு செய்ததில் சில்லறை விற்பனை விலையைவிடந்க் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது.
அதையடுத்து அந்த கடை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பேருந்து நிலைய வளாகத்திற்குள் இறந்த மற்றும் சுகாதாரமற்ற நிலையில் உணவுப் பொருள்கள் வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர்.