தினமலர் 06.08.2010
கோவில்பட்டி குடிநீர் திட்டம்: துணை முதல்வரிடம் மனு
கோவில்பட்டி, : கோவில்பட்டி குடிநீர் திட்டத்தை நிறைவேற்றக்கோரி துணை முதல்வரை சந்தித்து கோவில்பட்டி சேர்மன் மனுக்கொடுத்தார்.தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் வந்துள்ளார். இதில் நேற்று தூத்துக்குடி மாநகரில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட துணை முதல்வரை கோவில்பட்டி சேர்மன் மல்லிகா சந்தித்து கோவில்பட்டி குடிநீர் திட்டத்தை விரைவாக செயல்படுத்தக் கோரி மனுக்கொடுத்தார். துணை முதல்வரிடம் வழங்கிய மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, கோவில்பட்டி நகராட்சியின் கூட்டுக்குடிநீர் திட்டம் கடந்த 1979ம் ஆண்டு துவங்கப்பட்டு 27 வழியோர கிராமங்கள், கயத்தாறு, கழுகுமலை, எட்டயபுரம் ஆகிய டவுண் பஞ்சாயத்துகள் மற்றும் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சியும் பயனடைந்து வந்தன. தற்போது கோவில்பட்டி நகராட்சியை தவிர மற்ற பயனாளிகளுக்கு தனியாக குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கோவில்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாக கடந்து விட்டதால் தலைமை பணியிடமான சீவலப்பேரி டூ கோவில்பட்டி வரையுள்ள குடிநீர் குழாய்கள் மிகவும் பழுதுபட்டு அதிகபட்ச நீரை செலுத்த முடியாத நிலையுள்ளது. இதைக்கருத்தில் கொண்டு கோவில்பட்டி நகராட்சியின் வரும் 2036ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் குடிநீர் வழங்கும் வகையில் தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து சீவலப்பேரி டூ சவலாப்பேரி, புளியம்பட்டி, நாறைக்கிணறு, கொல்லங்கிணறு, கடம்பூர், குருமலை, மந்தித்தோப்பு வழியாக கோவில்பட்டி நகரம் வரை புதிய பைப்லைன் அமைக்கவும், தலைமை நீரேற்று நிலையத்தில் ஏற்கனவேயுள்ள நீர் உறிஞ்சி கிணறுகளுடன் கூடுதலாக இரண்டு கிணறுகள் அமைத்து 12.454 மில்லியன் லிட்டர் குடிநீர் கோவில்பட்டி நகருக்கு கிடைக்கும் வகையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. மேலும் சட்டசபையில் 2010 – 2011ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையில் கோவில்பட்டி நகருக்கு தனிகுடிநீர் திட்டம் நிறைவேற்றப்படுமென துணை முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இக்குடிநீர் திட்டத்தின் செயலாக்க திட்ட மதிப்பீடு ரூ.79.89 கோடியில் தயாரிக்கப்பட்டு டுபிட்கோ நிறுவனத்தின் பரிசீலனையில் உள்ளது. ஆகவே மிகவும் அவசியமான இத்திட்டத்தின் தேவையை கருதி திட்டத்திற்கான நிதியை விடுவித்து கோவில்பட்டி நகருக்கு புதிய குடிநீர் திட்டத்தை விரைவாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக துணை முதல்வருக்கு கொடுக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும் கோவில்பட்டி நகராட்சியில் ரோடுகள், மழைநீர் வடிகால் மேம்பாட்டு திட்டத்திற்காகவும், நகர விஸ்தரிப்பு பணிக்காகவும் மானிய நிதி ஒதுக்க வேண்டுமெனவும் கோரிக்கை மனு வழங்கப்பட்டுள்ளது. அப்போது கோவில்பட்டி நகராட்சி கமிஷ்னர் விஜயராகவன், பொறியாளர் செய்யதுஅகமது, சுகாதார அலுவலர் ராஜசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.