தினமணி 05.02.2010
கோவில்பட்டி நகராட்சியில் குடிநீர் விநியோகம் குறித்த ஆலோசனைக் கூட்டம்
கோவில்பட்டி, பிப். 4: கோவில்பட்டி நகராட்சியில் குடிநீர் விநியோகம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நகர்மன்றத் தலைவி மல்லிகா தலைமையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:
ஒவ்வொரு மண்டலத்திற்கும் 2 மணி நேர குடிநீர் விநியோகம் செய்வது என்றும், இத் திட்டம் வேலாயுதபுரம் பகுதி குடிநீர் விநியோகத்திலிருந்து அமல்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
குடிநீர் விநியோகம் செய்யப்படும் நேரத்தில் மோட்டார்கள் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டால், நகராட்சி அதிகாரிகள் மோட்டாரை பறிமுதல் செய்து இணைப்பு துண்டிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
குடிநீர் விநியோகத்தை கண்காணிக்க நகர்மன்ற உறுப்பினர்கள் தவமணி (திமுக), ஜோதிபாசு (சி.பி.எம்.), தெய்வேந்திரன் (மதிமுக), பேச்சிமுத்து (காங்கிரஸ்), ராமர் (அதிமுக), லட்சுமணன் (தேமுதிக) சரோஜா (சி.பி.ஐ.) ஆகியோர் கொண்ட குழு அமைக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
சீரான குடிநீர் விநியோகம் செய்வதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என நகர்மன்றத் தலைவி மல்லிகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.