தினமலர் 07.09.2010
கோவையில் விளம்பர ஆதிக்கம் எல்லை மீறல்! அரசுத்துறை அதிகாரிகள் ஆசி
கோவை: கோவை நகரில் விளம்பரப் பலகைகளின் ஆதிக்கம் எல்லை மீறிச் சென்றுள்ளது; மாவட்ட நிர்வாகமும் இதற்கு பலத்த ஆதரவு அளித்து வருவதால், விதிகளை அப்பட்டமாக மீறி விளம்பரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
கோவையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் வரையிலும், விளம்பரப் பலகைகள் மற்றும் ஆடம்பர விளம்பர விளக்குகள் வைக்க கட்டுப்பாடுகள் இருந்தன. ரயில்வேதுறைக்குச் சொந்தமான இடத் தைத் தவிர, மற்ற இடங்களில் அத்துமீறியும், அனுமதியின்றியும் வைக்கப் பட்டிருந்த விளம்பரப் பலகைகள் அகற்றப் பட்டன. சுப்ரீம்கோர்ட் உத்தரவின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. வாகன ஓட்டிகளின் கவனத்தைச் சிதறடிக்கும் விளம்பரங்களை அகற்ற சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது. தற்போதுள்ள கலெக்டர் உமாநாத், ஆரம்பத்திலிருந்தே விளம்பரப் பலகைகள் விஷயத்தில் சிறிதும் அக்கறை காட்டவில்லை. இதைப் பயன்படுத்திக் கொண்டு, பூங்கா, நடைபாதை, நிழற்கூரை என எல்லாவற்றையும் கோவை மாநகராட்சி அதிகாரிகள் தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்த்துக் கொடுத்துள்ளனர். இவை எதிலுமே, அரசின் விதிமுறைகள் பின்பற்றப் படுவதில்லை; மக்கள் நலனும் கவனிக்கப்படுவதில்லை. கோவை ரேஸ்கோர்ஸ், அவிநாசி ரோடு மற்றும் திருச்சி ரோடுகளில் இந்த விதி மீறல்கள் கண்கூடாக தெரிகின்றன. அரசு நிதியில் “சென்டர் மீடியன்‘ அமைக்கப்பட்ட அவிநாசி ரோட்டிலும், “ஸ்பான்சர்‘ மூலமாக கட்டப்பட்ட “சென்டர் மீடியன்‘ பகுதிகளில் 5 அடிக்கு ஒன்று வீதம் பிரமாண்டமான விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளன. இதே போல, நடைபாதைகளிலும் படு கவர்ச்சியான விளம்பரங்கள் பெரிது பெரிதாக வைக்கப் பட்டுள்ளன. ரேஸ்கோர்ஸ் பகுதியிலும் நடைபாதையை ஒட்டியும், சாலையோரத்திலுமாக இரு புறமும் இதே அளவுக்கு விளம்பரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும், இரவு முழுவதும் ஒளிரும் வகையில் விளக்குகளுடன் பொருத்தப்பட்டுள்ளன. தெரு விளக்குகள் எரியாதபோதும் கூட, இவை தொடர்ச்சியாக ஒளி வீசுகின்றன. வீடுகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் கடுமையான மின் தட்டுப்பாடு இருக்கும் நிலையில் இந்த விளம்பரப் பலகைகளுக்கு இவ்வளவு மின்சாரம் தேவையா என்பது பற்றி யாரும் கேள்வி எழுப்புவதில்லை. அதிகாரிகளும் அதைப் பற்றி கவலைப்படுவதுமில்லை. ரேஸ்கோர்ஸ், அவிநாசி ரோடு, திருச்சி ரோடு, ஆத்துப்பாலம் ரோடு, நஞ்சப்பா ரோடு, பாரதியார் ரோடு என எங்கெங்கு திரும்பினும் விளம்பரப் பலகைகளின் ஆதிக்கம், உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அவிநாசி ரோடு மேம்பாலத்திலும் மீண்டும் விளம்பரங்கள் தலை தூக்கியுள்ளன. வாகன ஓட்டிகளின் கவனத்தைச் சிதறடித்து, விபத்துகளுக்கு அழைப்பு விடுக்கும் இந்த விளம்பரங்கள் பற்றி அரசும் அக்கறை காட்டவேயில்லை. இந்த பிரச்னையை எதிர்க்கட்சிகளோ, நுகர்வோர் அமைப்புகளோ போராடி, கோர்ட்டுக்கு சென்று நியாயம் கேட்டால் மட்டுமே, விளம்பர விதிமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். அமைதி காத்து வருவதால், ஆட்சி மாற்றம் வரும் வரையிலும் இந்த காட்சி மாற வாய்ப்பில்லை.
விரைவில் வழக்கு: கோவையில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, மாநகராட்சி சாலை என எல்லாச் சாலைகளிலும் இந்த விளம்பரப் பலகைகளின் அத்துமீறல் அதிகரித்துள்ளது. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்ட இன்ஜினியர் பொறுப்பில் உள்ள வெள்ளியங்கிரி கூறுகையில்,””அவிநாசி ரோட்டில் “ஸ்பான்சர்‘ அமைத்த இடங்களில் விளம்பரம் வைக்க கலெக்டர் அனுமதி வழங்கியுள்ளார். அதில் அளவுக்கு அதிகமான விளம்பரங்கள் வைக்கப்பட்டிருப்பதாக புகார் வந்துள்ளது; ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார். விளம்பரப் பலகைகளின் விதிமீறலுக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் அமைப்பின் செயலர் கதிர்மதியோன் கூறுகையில், “”ரோட்டின் நடுவில் விளம் பரம் வைப்பதே, வாகன ஓட்டிகளின் கவனத்தைக் கவரத்தான். இந்த விஷயத்தில் எது விதிமீறல் என்பதில், மத்திய, மாநில அரசுகளிடம் தெளிவு இல்லை. இது தொடர்பாக மத்திய அரசின் சாலை மற்றும் தரைவழிப்போக்குவரத்துத்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். பதிலைப் பொறுத்து, மத்திய, மாநில அரசுகளின் மீது விரைவில் வழக்குத் தொடுக்க முடிவு செய்துள்ளோம்,” என்றார்.