தினமலர் 19.04.2010
கோவை அம்மன்குளம் குடியிருப்பில் இரண்டாவது கட்டடம் பிளந்தது
கோவை : கோவை அம்மன் குளம் பகுதியில் ஏற்கனவே குடியிருப்பு கட்டடம் மண்ணில் புதைந்த பரபரப்பு அடங்குவதற்குள், தற்போது இதன் எதிர்புறம் உள்ள மற்றொரு கட்டடத்தின் நடுவே நேற்று திடீர் பிளவு ஏற்பட்டது. இதனால், இங்கு கட்டப்பட்டுள்ள பிற அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்களின் தரமும் கேள்விக்குறியாகியுள்ளது.
கோவை அம்மன் குளம் பகுதியில் தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் சார்பில், 936 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. ஜவகர்லால் நேரு தேசிய நகர் புனரமைப்புத் திட்டத்தில் கட்டப்படும் இந்த கட்டடங்களின் மொத்த மதிப்பு 29.43 கோடி ரூபாய்.கட்டுமானப் பணிகள் 80 சதவீதம் பூர்த்தியான நிலையில், இதில் 48 வீடுகள் கொண்ட ஒரு கட்டடம் மண்ணில் புதையத் துவங்கியது. 58 செ.மீ., புதைந்து விட்ட நிலையில் மேலும் புதையாமல் தடுக்கப்பட்டது. அஸ்திவாரம் போடப்பட்ட பகுதி வரை ‘கான்கர்‘ எனும் இறுகிய மண் இருந்ததால், ‘கட்டுமானத்துக்கு ஏற்ற மண்‘ என, பி.எஸ்.ஜி., தொழில் நுட்பக் கல்லூரி பேராசிரியர் பழனிக்குமார் அறிக்கை அளித்தார்.இதனால் கட்டடம் புதைவதற்கான காரணத்தை கண்டறிய, அஸ்திவாரத்தில் இருந்து மேலும் 12 மீட்டர் ஆழம் தோண்டி மண் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் இளகிய மண் (லூஸ் பாக்கெட்) கலந்து இருந்தது கண்டறியப்பட்டது.
இந்த இளகிய மண்தான் கட்டடம் புதைய காரணம் என உறுதியானது. இதனால் கட்டடத்தை முழுமையாக இடித்து, வேறு இடத்தில் கட்ட முடிவானது. தற்போது கட்டடத்தை இடிக்கும் பணி நடந்து வருகிறது.இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை கோவையில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்தது. நேற்று காலை பணிக்கு வந்த கட்டட தொழிலாளர்கள், இடிக்கப்படும் கட்டடத்தின் எதிரே உள்ள மற்றொரு கட்டடத்தின் நடுவே பிளவு ஏற்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.அங்கு வந்த குடிசை மாற்று வாரிய பொறியாளர்கள் முந்தைய கட்டடம் போல், இந்த கட்டடமும் ஒரு புறம் புதைவதுதான், நடுவே ஏற்பட்ட பிளவுக்கு காரணம் அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த அம்மன் குளம் பகுதி மக்கள் ஆவேசத்துடன் குவிந்தனர். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க, உடனடியாக போலீசார் குவிக்கப்பட்டனர்.இப்பகுதி மக்கள் கூறியதாவது:இந்த இடம் 35 ஆண்டுகளாக குளமாக தான் இருந்தது.
குளம் என நன்கு தெரிந்தும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட இந்த இடத்தை தேர்வு செய்தது முதல் தவறு. இதன் விளைவாக தற்போது கட்டடங்கள் ஒவ்வொன்றாக மண்ணுக்குள் புதைந்தும், பிளவுபட்டும் வருகின்றன. நாளை அனைவரும் குடியேறியபின் மொத்தமாக இடிந்து விழாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? சிறு மழைக்கே இரண்டாக பிளந்த கட்டடம், அடைமழையின் போது நிச்சயம் இடிந்து விழும். இந்த வீடுகளில் இனி யாரும் குடியிருக்க தயார் இல்லை, என்றனர்.குடிசை மாற்று வாரிய செயற் பொறியாளர் கோபி கூறியதாவது:இரண்டு கட்டடங்களை இணைக்கும் இடத்தில் ‘கான்கிரீட் காலம்‘ பிரிந்துள்ளது. இரண்டும் வெவ்வேறு கான்கிரீட் காலங்கள். சேர்த்து கட்டடப்படும் இரு கட்டடங்களின் உயரம் அதிகமாக இருந்தால், மாறும் காலநிலைக்கு ஏற்ப விரிவடைவது வழக்கம். இவ்வாறு விரிவடைவதை தடுக்க, இரண்டு கட்டடங்களையும் இணைக்கும் இடத்தில் ‘எக்ஸ்பேன்ஷன் ஜாயின்ட்‘ ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மூன்று மாடி கட்டடம் என்றால் இது போல் ‘இணைப்பு‘ கொடுப்பது வழக்கம். கட்டடத்தின் வட மூலை சிறிது மண்ணில் புதைந்துள்ளதால் அந்த ஜாயின்ட்தான் சிறிது விலகியுள்ளது.கட்டடம் மண்ணில் புதைய, ஏற்கனவே புதைந்த கட்டடத்தின் அடியில் இருப்பதுபோல் இங்கும் இளகிய மண் (லூஸ் பாக்கெட்) இருப்பதுதான் காரணம். அனைத்து கட்டடங்களின் அஸ்திவாரத்தையும் உறுதிப்படுத்தப் போகிறோம். நிபுணர் குழு ஆய்வுக்குப் பின் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்யப்படும்‘ என்றார்.குடிசை மாற்று வாரியம் கூறுவது என்ன?கட்டடம் பிளவுப்பட்டதை கண்ட குடிசை மாற்று வாரிய அதிகாரிகள், உடனே இது குறித்த விரிவான அறிக்கையை தயார் செய்து கலெக்டரிடம் சமர்ப்பித்தனர்.
கலெக்டரின் அறிவுரையின்படி உடனடியாக அனைத்து பத்திரிகைகளுக்கும் விளக்கம் அனுப்பி வைக்கப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அம்மன்குளத்தில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில்,கடந்த 3ம் தேதி 48 குடியிருப்புகள் கொண்ட 2(பி) பிளாக்கில் சரிவு ஏற்பட்டு கீழே இறங்கியது. இதைத் தொடர்ந்து, அனைத்து பிளாக்குகளையும் ஆழ்துளையிட்டு மண்ணின் தன்மையை ஆராயும் பணி நடந்து வருகிறது.ஆய்வு முடிவுகளின்படி, நவீன தொழில்நுட்பத்தை கொண்டு கட்டடத்தின் அஸ்திவாரத்தை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், 24 குடியிருப்புகள் கொண்ட 4(பி) பிளாக்கின் வடக்கு மூலையில் ஆழ் துளையிடும் பணி நடந்தபோது, இதன் அடித்தளத்துக்கு கீழே இலகுவகை மண் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இரவு 10.00 மணியளவில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்து கொண்டிருந்தது.அப்போது 24 குடியிருப்புகள் கொண்ட 4(பி) பிளாக்கின் வடக்கு பகுதி, மண்ணில் இறங்கியது தெரிய வந்தது. நேற்று காலையில் 24 குடியிருப்புகள் கொண்ட 4(பி) பிளாக்கின் வடபுறம் 25 செ.மீ., இறங்கியுள்ளது தெரிய வந்தது. கட்டடம் மீண்டும் மண்ணுக்குள் இறங்காமல் இருக்க, நவீன தொழில்நுட்ப உதவியுடன் சரிந்த கட்டடத்தின் அடித்தளத்தை பலப்படுத்தி உறுதிநிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.