தினமணி 06.11.2013
கோவை கிழக்கு மண்டல அலுவலகத்தில் சோலார் மின்உற்பத்தி திட்டம் துவக்கம்
தினமணி 06.11.2013
கோவை கிழக்கு மண்டல அலுவலகத்தில் சோலார் மின்உற்பத்தி திட்டம் துவக்கம்
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் ரூ.
9.7 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட சோலார் மின்உற்பத்தித் திட்டத்தை மேயர்
செ.ம.வேலுசாமி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.
கோவை கிழக்கு மண்டல அலுவலகத்தில் ரூ. 9.70 லட்சம் மதிப்பில் 7.5 கிலோ
வாட்ஸ் சோலார் மின் உற்பத்திக் கலன்கள் அமைக்கப்பட்டன. இதனைத் தொடங்கி
வைத்து மேயர் பேசியது:
தமிழகத்தை மின்மிகை மாநிலமாக உருவாக்க பல்வேறு மின்உற்பத்தித்
திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்தி வருகிறார். அவரது கடந்த ஆட்சிக்
காலத்தில் தான் அதிக அளவில் மின் உற்பத்திக்கான காற்றாலைகள் நிறுவப்பட்டன.
அதேபோல தற்போது மாற்று எரிசக்திப் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக, சூரிய
மின்சக்தி திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. சோலார்
நகரமாக மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ள 40 நகரங்களில் தமிழகத்தில்
முதன்மை நகரமாக கோவை திகழ்கிறது.
இதனால் இம்மாநகராட்சியில் நிறுவப்படும் சோலார் மின்திட்டங்களுக்கு அதிக
அளவு மானியம் பெறப்பட உள்ளது. சோலார் நகரமாக உயர்த்துவதன் முதல்கட்டமாக
மாநகராட்சி அனைத்து அலுவலகங்களிலும் சோலார் மின்உற்பத்தி
தொடங்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, தனியார் கட்டடங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் சோலார்
மின்சக்தி திட்டங்கள் அமைத்திட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. கோவை கிழக்கு
மண்டல அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ள 7.5 கிலோ வாட்ஸ் சோலார்
மின்உற்பத்தித் திட்டத்தின் மூலம் ஒரு நாளுக்கு 40 யூனிட் மின்சாரம்
உற்பத்தி செய்யப்படும்.
இதன்மூலம் மண்டல அலுவலகத்திற்குத் தேவையான மின்தேவையில் 40 சதவீதம்
சேமிக்கப்படுவதுடன், ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் வரையில் மின் கட்டணம்
சேமிக்கப்படும். மேலும் 7 ஆண்டுகளில் சோலார் மின் திட்டத்திற்காகச்
செலவிடப்பட்ட முதலீட்டுத் தொகை முழுமையாகக் கிடைக்கும் என்றார்.
மாநகராட்சி ஆணையர் லதா, துணை மேயர் லீலாவதி உண்ணி, துணை ஆணையர் சிவராசு.
மண்டலத் தலைவர்கள் கே.ஆர்.ஜெயராம், ராஜ்குமார், பெருமாள்சாமி, நிலைக்
குழுத் தலைவர்கள் தாமரைசெல்வி, செந்தில்குமார், நியமனக் குழு உறுப்பினர்
ராஜேந்திரன் உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.