தினபூமி 07.10.2013
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உயர்நிலைப் பாலம்
சென்னை – கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 15 கோடி
ரூபாய் செலவில் உயர்நிலைப் பாலம் ஒன்றை கட்ட முதல்வர் ஜெயலலிதா
உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்
கூறியிருப்பதாவது:_
கோயம்புத்தூர் மாநகரம் தமிழகத்தில் உள்ள நகரங்களில் ஒரு முக்கிய தொழில்
நகரமாகும். இந்த நகரின் பெருகி வரும் மக்கள் தொகை மற்றும் வாகனப்
பெருக்கத்திற்கு ஏற்ப இந்நகருக்காக உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த
முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கோயம்புத்தூர் மாநகரில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலைக்
கட்டுப்படுத்துவதற்கும், வாகனங்கள் சீராக இயங்குவதற்கும் மாநகரில்
தற்பொழுதுள்ள சாலைகளை மேம்படுத்துவதும் மற்றும் புதிய பாலங்கள்
அமைக்கப்படுவதும் மிகவும் அவசியம் ஆகும்.
அந்த வகையில், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நொய்யல் ஆற்றின்
குறுக்கே சுண்டக்காமுத்தூர் சாலைக்கு அருகே உயர்நிலைப் பாலம் ஒன்றினைக்
கட்ட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த பாலத்தை இணைக்கும் 7.9
கி.மீ நீளமுள்ள சாலைகளான பே%ர் செல்வபுரம் புறவழிச்சாலை, பாலக்காடு பிரதான
சாலை மற்றும் கோவைபுதூர் சாலைகளை மேம்படுத்தவும் முதல்வர் ஜெயலலிதா
உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில்
போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும். இப்பணிகளை 15 கோடி ரூபாய்
செலவில் நிறைவேற்ற ஒப்புதல் அளித்தும் முதல்வர் ஜெயலலிதா
உத்தரவிட்டுள்ளார்.
அரசின் இந்த நடவடிக்கை மூலம் கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைய வழிவகை ஏற்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.