கோவை மாநகராட்சிக்கு சொந்தமான கழிப்பிடங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை
கோவை மாகராட்சி பகுதிகளில் உள்ள கட்டண கழிப்பிடங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப் படுவதாக புகார்கள் வந்ததை தொடர்ந்து அவற்றின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள்
கோவை மாநகராட்சி எல்லைக்குள் பஸ் நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டண கழிப்பிடங்கள் உள்ளன. இங்கு மாநகராட்சியால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கட்டணங்களுக்கும் கூடுதலாக கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் கூறப்பட்டன. சிறுநீர் மற்றும் மலம் கழிக்க ஒரு ரூபாய் தான் வாங்க வேண்டும். இதேபோல குளியலறை உபயோகிக்க ரூ. 3 கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்.
ஆனால் கோவையில் மாநகராட்சிக்கு சொந்தமான பெரும்பாலான கட்டண கழிப்பிடங்களில் சிறு நீர் மற்றும் மலம் கழிக்க ஒரு ரூபாய்க்கு பதிலாக 3 ரூபாய், 4 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் குளிப்பதற்கு ரூ. 3–க்கு பதில் ரூ. 5 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் இவற்றிற்கு ரசீதும் கொடுக்கப்படுவதில்லை. மேலும் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டண கழிப்பிடங்களில் அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், புகையிலை, சிகரெட் மற்றும் இதர பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் ஏராளமான புகார்கள் வந்தன. கோவையின் முக்கிய இடங்களில் கூட அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக கோவை மாநகராட்சிக்கு புகார்கள் வந்தன.
லைசென்சு ரத்து செய்யப்படும்
இதைதொடர்ந்து கட்டண கழிப்பிடங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் அவற்றை எடுத்த ஏல உரிமைதாரர்களின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும். மேலும் அபராதம் விதித்து லைசென்சு ரத்து செய்யவும், உரிமதாரரை கறுப்பு பட்டியலில் சேர்க்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது.