மாலை மலர் 05.09.2009
கோவை மாநகராட்சியில் இ–டெண்டர் முறையில் ஒப்பந்தம் அறிமுகம்; மேயர், ஆணையாளர் பங்கேற்பு
கோவை மாநகராட்சியில் இ–டெண்டர் முறையில் ஒப்பந்தம் அறிமுக விழா இன்று காலை நடைபெற்றது. ரூ. 10 லட்சத்துக்கும் மேல் டெண்டர் எடுக்கும் ஒப்பந்ததாரர்கள் இ–டெண்டர் முறையில் ஒப்பந்தம் கோரி விண்ணப்பிக்கலாம் என்ற புதிய திட்டத்தை மாநகராட்சி கடந்த மாதத்துக்கு முன்பு அறிமுகப்படுத்தியது.
இ–டெண்டர் முறையில் டெண்டருக்கு விண்ணப்பிக்கும் முறை அறிமுகம் இன்று காலை கோவை மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இதில் மாநகராட்சி மேயர் ஆர். வெங்கடாசலம், ஆணையாளர் அன்சுல் மிஸ்ரா, துணை மேயர் நா. கார்த்திக் ஆளுங் கட்சித்தலைவர் ஆர்.எஸ். திருமுகம், எதிர்க் கட்சித்தலைவர் உதயகுமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இ–டெண்டர் முறையில் ரூ. 10 லட்சத்துக்கும் மேல் மதிப்பீடு உள்ள அனைத்து டெண்டர்களையும் இனி ஆன் லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஒவ்வொரு ஒப்பந்ததாரர்களுக்கும் ரகசிய எண் மற்றும் பாஸ்வேர்டு வழங்கப்படும். இதில் விவரங்களை குறிப் பிட்டு ஒப்பந்த விவரங்களை மாநகராட்சி நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கலாம். தபால் நடைமுறை, டெண்டர் கலப்பு, பறிப்பு போன்ற சிக்கல் இனி இருக்காது.
இந்த புதிய முறையை மாநகராட்சியில் செயல் படுத்துவதன் மூலம் ஒப்பந்ததாரர்கள் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்தே இணைய தளம் மூலம் ஒப்பந்தப்புள்ளி அறிக்கைகள், ஒப்பந்தப்புள்ளிகள் சமர்ப்பித்தல் மற்றும் அதன் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
இதனால் வளர்ச்சி பணிகள் காலதாமதமின்றி விரைவாக செய்து முடிக்கப்படும் என்று மாநகராட்சி மேயர் ஆர். வெங்கடாசலம் தெரிவித்தார்.