தினமணி 19.08.2010
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் நாளை குறைதீர் முகாம்
கோவை, ஆக. 18: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட 6 வார்டுகளுக்கான குறைதீர் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
10, 11, 14, 15, 16, 19-ம் வார்டுகளுக்கு உட்பட்ட மக்கள் இம் முகாமில் தங்களது குறைகளைத் தெரிவித்து நிவர்த்தி செய்துகொள்ளலாம். இம் முகாமை மேயர் ஆர்.வெங்கடாசலம் துவக்கிவைக்கிறார். மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா, துணை மேயர் நா.கார்த்திக், கிழக்கு மண்டலத் தலைவர் எஸ்.எம்.சாமி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
÷புதிய சொத்துவரி விதித்தல், தொழில்வரி விதித்தல், சொத்துவரி பெயர் மாற்றம் செய்தல், புதிய குடிநீர் இணைப்பு, குடிநீர் இணைப்பு பெயர்மாற்றம் செய்தல், குடியிருப்பு அல்லாத முறையில் இருந்து குடியிருப்பு முறைக்கு குடிநீர்க் கட்டணத்தை மாற்றம் செய்தல், பிறப்பு இறப்பு சான்றிதழ் பெறுதல், கட்டட வரைபட அனுமதி நகல் வழங்குதல், சொத்துவரி மேல்முறையீடு தீர்ப்பாயம் உத்தரவை அமல்படுத்துதல், நிலஅளவைப் பதிவேடு நகல் பெறுதல், எரியாத தெருவிளக்குகளை சரிசெய்தல், திடக்கழிவுகளை அகற்றுதல் உள்ளிட்டவை தொடர்பான மனுக்களை மக்கள் அளிக்கலாம்.