தினத்தந்தி 30.06.2013
கோவை மாநகராட்சி பகுதிகளில் மழை நீர் சேகரிப்பு அமைத்தால் தான்
கட்டிட அனுமதி வழங்கப்படும் மேயர் செ.ம.வேலுச்சாமி தகவல்
கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று மேயர் செ.ம.வேலுச்சாமி
கூறினார்.
மரக்கன்று நடும் விழா
கோவை ராமநாதபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள்
நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவை மேயர் செ.ம.வேலுச்சாமி கலந்து
கொண்டு மரக்கன்றுகளை நட்டு பேசியதாவது:–
கோவை மாநகராட்சியில் உள்ள 63 மாநகராட்சி பள்ளி வளாகங்களில் முதல்
கட்டமாக 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டு மாநகராட்சி அரசு
அலுவலகங்கள், மேல்நிலைப்பள்ளியில் வேம்பு, பூவரசு போன்ற நிழல் தரும்
மரங்கள் வைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி சுற்று சூழலை பாதுகாப்பதிலும்
மரக்கன்றுகளை நடுவதிலும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது.
மாநகராட்சியிலுள்ள அனைத்து பூங்காக்களிலும் இருக்கிற இடத்திற்கேற்றவாறு
மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
நடப்பட்ட மரக்கன்றுகளை பராமரிக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கும்,
மாணவர்களுக்கும் உள்ளது. கோவை மாநகரை மரங்கள் அடர்ந்த பசுமை மாநகரமாக
மாற்றுவதற்கு பொது மக்களும் தங்களுடைய ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
அனுமதி வழங்கப்படும்
மாநகராட்சியில் உள்ள அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு
கட்டமைப்பை அவசியம் ஏற்படுத்த வேண்டும். அது போல வணிக வளாகங்களில், திறந்த
வெளியிடத்தில் மரம் அவசியம் வளர்க்க வேண்டும். மழை நீரை சேமிக்கவும், மரம்
வளர்த்து சுற்று சூழலை பாதுகாக்கவும் மாநகராட்சி சில வழிமுறைகளை வகுத்து
வருகிறது. மழைநீர் சேகரிப்பு, மரம் வளர்த்தல் ஆகியவை இருந்தால் மட்டுமே வரி
விதிப்பு, கட்டிட அனுமதி வழங்கப்படும். இது தொடர்பாக கோவை மாநகராட்சியில்
குடியிருப்பு, அடுக்குமாடி குடியிருப்புகள், வணிகவளாகங்கள்,திருமண
மண்டபங்கள் ஆகியவற்றை கணக்கு எடுக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
அதன் பின்னர் கவுண்டம்பாளையம் 8–வது வார்டில் உள்ள எஸ்.பி.எம்.கார்டன்
மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ. 22 லட்சத்து 50 ஆயிரம் செலவில் மழை
நீர்வடிகால் அமைக்கும் பணிக்கு மேயர் செ.ம.வேலுச்சாமி அடிக்கல் நாட்டினார்.
அதன்பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் நிதி ரூ. 9 லட்சத்து 8 ஆயிரம்
மதிப்பில் கட்டப்பட உள்ள சத்துணைவு மையத்திற்கும் அவர் அடிக்கல்
நாட்டினார்.
இந்த நிகழ்ச்சிக்கு சேலஞ்சர்துரை எம்.எல்.ஏ., ஆணையாளர் லதா ஆகியோர்
முன்னிலை வகித்தனர். அந்த பள்ளி வளாகத்தில் 30 இடங்களில் மரக்கன்றுகளை
மாணவ–மாணவிகள் நட்டனர். இந்த நிகழ்ச்சியில் துணை ஆணையாளர் சிவராசு, துணை
மேயர் லீலாவதி, மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.