தினமணி 01.09.2014
கோவை மேயர் தேர்தல்: புகார் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு
கோவை மாநகராட்சி மேயர் தேர்தல் தொடர்பாக புகார் தெரிவிக்க 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் எஸ்.கணேஷ் வெளியிட்டுள்ள செய்தி:
கோவை மாநகராட்சியில் காலியாக உள்ள மேயர் பதவிக்கான தேர்தல் வரும் செப்டம்பர் 18-ஆம் தேதி நடக்க உள்ளது.
தேர்தல் நடைமுறைகள் தொடர்பாக புகார் தெரிவிக்க வேண்டியிருந்தால், மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் இதற்காக மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையின் 0422 – 2302323 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
தேர்தல் அலுவலர்களுக்குப் பயிற்சி
கோவை மேயர் தேர்தலில் பணியாற்றும் அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி சனிக்கிழமை நடந்தது.
மேயர் தேர்தலில் பணியாற்றும் அலுவலர்களுக்கு ராமகிருஷ்ணாபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, எஸ்.ஆர்.பி. அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சித்தாபுதூர் மேல்நிலைப் பள்ளி, ரங்கநாதபுரம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஆர்.எஸ்.புரம் மேற்கு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய 5 இடங்களில் உதவித் தேர்தல் அலுவலர்கள் பயிற்சியளித்தனர்.
வாக்கு எண்ணுமிடத்தில் ஆய்வு
கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் பதிவாகும் வாக்கு எண்ணுமிடத்தை மாநகராட்சி ஆணையர் எஸ்.கணேஷ் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
கோவை மேயர் தேர்தலில் பதிவாகும் வாக்குகள், கோவை, அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் எண்ணப்பட உள்ளன. வாக்கு எண்ணப்படும் இடத்தையும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் அறையையும் ஆணையர் எஸ்.கணேஷ் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் அறைகளுக்குக் கூடுதல் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அவர் அறிவுறுத்தினார். துணை ஆணையர் ப.காந்திமதி, மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.