தினத்தந்தி 23.08.2013
கோவை வ.உ.சி. பூங்காவில் பார்வையாளர்களை மிரளவைத்த கோதுமை நாக பாம்பு குட்டிகள்
கோவை வ.உ.சி. பூங்காவில் புதிய வரவாக வந்த கோதுமை நாக பாம்பு குட்டிகள் பார்வையாளர்களை மிரள வைத்தது.
விலங்கியல் பூங்கா
கோவை மாநகராட்சி வ.உ.சி. உயிரியல் பூங்காவில் பெலிக்கான், மயில், மான்,
கடமான் உள்ளிட்ட விலங்குகள், பறவை இனங்களை சேர்ந்த 890 உயிரினங்கள் உள்ளன.
அபூர்வ இனமான கண்ணாடி விரியன் உள்ளிட்ட கொடிய விஷம் கொண்ட பாம்புகளும்
பராமரிக்கப்படுகிறது.
இந்த பூங்காவுக்கு கோவை மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதியை சேர்ந்தவர்கள்
தங்கள் குழந்தைகளுடன் வந்து பூங்காவில் வளர்க்கப்படும் உயிரினங்களை
பார்த்து செல்கிறார்கள்.
பூங்காவுக்கு புது வரவு
மாநகராட்சி பூங்காவில் உள்ள கோதுமை வகையை சேர்ந்த நாகப்பாம்புகளில் ஒரு
பாம்பு 10 முட்டை இட்டது. அந்த முட்டைகளை தனியாக எடுத்து இங்குபேட்டரில்
வைத்தனர். நேற்று அந்த முட்டைகளில் இருந்து 4 பாம்பு குட்டிகள் வெளியே
வந்தன.
அவைகள் தனியாக ஒரு இடத்தில் வைக்கப்பட்டு உள்ளது. பூங்காவுக்கு
வந்தவர்கள் அவற்றை ஆர்வத்துடன் பார்த்து சென்றனர். மேலும் பூங்காவில்
இருக்கும் 80 ஜோடி புறாக்களில் ஒரு புறா நேற்று 2 குஞ்சுகளை பொறித்தது.
இது குறித்து பூங்கா இயக்குனர் டாக்டர் அசோகன் கூறியதாவது:-
பராமரிப்பு
கடந்த சில வாரத்துக்கு முன்பு பூங்காவில் உள்ள அரியவகை பாம்புகளில்
ஒன்றான, கொடிய விஷம்கொண்ட 2 கண்ணாடி விரியன் பாம்புகள் 40 குட்டிகளை
போட்டது. கொடிய விஷம் கொண்டது என்பதால், குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல்
அவற்றை பராமரிப்பதில் சிரமம் உள்ளது. எனவே சில நாட்கள் பராமரிக்கப்பட்ட
பின்னர் அவைகள் வனப்பகுதியில் விடப்படும். கோதுமை வகை நாகப்பாம்புக்கு
விஷம் குறைவாகதான் உள்ளது. அந்த வகையை சேர்ந்த 4 பாம்பு குட்டிகளும்
பூங்காவிலேயே பராமரிக்கப்படும். இவ்வாறு டாக்டர் அசோகன் தெரிவித்தார்.
இந்த பாம்பு குட்டிகளை பார்க்க ஏராளமானோர் திரண்டனர். பாம்பு குட்டிகள்
அங்கும் இங்கும் சீறியபடி நெளிந்ததால் அதை பார்த்து பார்வையாளர்கள் மிரண்
டனர்.