தினமணி 23.11.2010
சங்ககிரி பேரூராட்சியில் தூர் வாரும் பணி தொடக்கம்
சங்ககிரி, நவ. 22: சங்ககிரியில் உள்ள கழிவு நீர் சாக்கடைகளைத் தூர் வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் மழை அதிகமாக பெய்து வருகின்றது. சனிக்கிழமை இரவு 62.2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி நின்றுள்ளது. குட்டைகள், ஏரிகள் நிரம்பி வருகின்றன. சங்ககிரி பகுதிகளில் இம்முறை நிலத்தடி நீர் அதிகரிக்க வாய்ப்புள்ளது என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சங்ககிரி பழைய பஸ்நிலையம், சேலம்–பவானி பிரதான சாலைகளில் சிறதளவு மழை பெய்தாலும் சாக்கடை கழிவுநீர் மழை நீரோடு கலந்து சாலைகளில் பெருக்கெடுத்து ஒடும். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை சங்ககிரி பேரூராட்சியின் சார்பில் இச்சாலைகளில் உள்ள கழிவுநீர் சாக்கடையை பொக்லைன் இயந்திரங்களை கொண்டு தூர் வாரும் பணி நடைபெற்று வருகின்றது.
இதேபோல் சாலையில் இரு புறமும் உள்ள சாக்கடைகளையும், காவல்நிலையம் எதிரே உள்ள சாக்கடைகளையும் தூர் வார வேண்டுமென பேரூராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.