தினமணி 05.02.2010
சங்கரன்கோவில் நகராட்சிப் பூங்கா திறப்பு
சங்கரன்கோவில், பிப். 4: தினமணி செய்தி எதிரொலியால் சங்கரன்கோவில் நகராட்சி பூங்கா திறக்கப்பட்டுள்ளது. கோமதிநகர் தெருவில் ஒருங்கிணைந்த சிறிய மற்றும் நடுத்தர நகரங்களின்மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் செலவில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
பூங்காவின் உள்ளே குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் நடை பயிற்சி செய்யும்வகையில் சிமிண்ட் தளம், குழந்தைகள் விளையாடுவதற்கான சறுக்கல், சீசா உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த பூங்கா கட்டிமுடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் திறக்கப்படாமல் இருந்தது.இதனால், பூங்காவில் உள்ள செடிகள் தண்ணீரின்றி வாடின. குழந்தைகள் கதவின் மேல் ஏறி உள்ளே குதித்து விளையாட ஆரம்பித்தனர். பராமரிப்பின்றி காணப்பட்ட இந்த பூங்கா குறித்து தினமணி நாளிதழில் கடந்த மாதம் செய்தி வெளியிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து நகராட்சிப் பூங்காவை பராமரிக்கும் பொறுப்பு அரிமா சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் நகராட்சிப் பூங்காவைத் திறந்து, பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பெண்களும் பெரியவர்களும் நடை பயிற்சி செய்யும் வகையில் பூங்கா இருப்பதால், பூஞ்செடிகள், புற்கள் வளர்த்து பூங்காவை மேலும் அழகுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர்.