தினமலர் 01.10.2013
சங்கிலிப்பள்ளம், ஜம்மனைப்பள்ளத்தை நகராட்சிகளின் நிர்வாக செயலர் ஆய்வு
திருப்பூர் :சபரி ஓடை, தாராபுரம் ரோடு சங்கிலிப்பள்ளம் பாலம் மற்றும் ஜம்மனைப்பள்ளம் ஆகிய பகுதிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் பனீந்தர் ரெட்டி நேற்று பார்வையிட்டார்.
நீரோடைகளில் கட்டட கழிவுகள் கொட்டுவதை கண்காணித்து தடுக்க வேண்டும். கழிவுநீர் தேங்காமல் செல்ல வழி ஏற்படுத்த அறிவுறுத்தினார்.
தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலர் பனீந்தர் ரெட்டி நேற்று திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். திருமுருகன்பூண்டி பாப்பீஸ் ஓட்டலில், புதிய திருப்பூர் கழக மேம்பாட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
அதைத்தொடர்ந்து, ஆத்துப்பாளையம் ஏ.வி.பி., ரோட்டில் உள்ள அம்மா உணவகத்தை பார்வையிட்டு, காலை மற்றும் மதிய உணவு தயாரிப்பு முறைகளை மகளிர் குழுவினரிடம் கேட்டறிந்தார். அப்போது,”அம்மா உணவகம் திட்டத்தை அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டும். தேவையான அளவு தட்டு, குடிநீர் வசதியை செய்துகொடுக்க வேண்டும். சுகாதாரத்தை சிறப்பாக பராமரிக்க வேண்டும்,’ என அறிவுறுத்தினார்.
அதைத்தொடர்ந்து, சபரி ஓடை, தாராபுரம் ரோடு சங்கிலிப் பள்ளம் பாலம் மற்றும் ஜம்மனைப் பள்ளம் ஆகிய பகுதிகளை பார்வையிட்டார். நீரோடைகளில் கட்டட கழிவுகள் கொட்டப்படுவதை தீவிரமாக கண்காணித்து தடுக்க வேண்டும்.
கழிவுநீர் தேங்காமல் செல்ல வழி ஏற்படுத்த அறிவுறுத்தினார். அதைத்தொடர்ந்து, ஆண்டிபாளையம் குளம் தூர்வாரும் பணிகளையும் பார்வையிட்டார்.