தினமலர் 21.10.2013
சத்தி ரோடு விரிவாக்கம் மாநகராட்சி புதிய திட்டம் தனியார் இடத்தை கையகப்படுத்த முடிவு
கோவை :கோவையில் விபத்துகள் அதிகம் நடக்கும் சத்தி ரோட்டை, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் விரிவு படுத்தாத நிலையில், திட்டப்பணிகளுக்காக மாநகராட்சி நிர்வாகமே விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. கோவை சத்தி ரோட்டில், காந்திபுரம் – ஆம்னி பஸ் ஸ்டாண்ட் வரையிலும் ரோடு அகலமாக இருந்தாலும், போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ளது.
டெக்ஸ்டூல் பாலம் முதல் மணியகாரம்பாளையம் வரையிலும் பாலமும், ரோடும் அகலமில்லாததால் உயிரிழப்பு விபத்துகள் ஏற்படுகிறது. “டெக்ஸ்டூல் பாலத்தை அகலப்படுத்த வேண்டும்; சத்தி ரோட்டை விரிவுபடுத்த வேண்டும்’ என, மேயர், எம்.எல்.ஏ., – எம்.பி., ஆகியோர் பலமுறை கோரிக்கை வைத்தும், தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், டெக்ஸ்டூல் பாலத்தை விரிவுபடுத்தும் வகையில், அதன் அருகிலே மற்றொரு பாலம் கட்டுவதற்கு முதல்வர் 20 கோடி ரூபாய் அறிவித்தார். ஆனால், மேம்பால பணிகள் இன்னும் துவங்கவில்லை. ரோட்டை விரிவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கவில்லை.
டெக்ஸ்டூல் பாலம் முதல் மணியகாரம்பாளையம் ரோடு வரையிலும் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ரோட்டை விரிவுபடுத்த வேண்டும் என, மாமன்றத்தில் கவுன்சிலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ள, சத்தி ரோட்டை சொந்த பொறுப்பில் விரிவுபடுத்த மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. சத்தி ரோட்டில் விரிவுபடுத்த வேண்டிய பகுதிகளை மாநகராட்சி சர்வே மற்றும் நகரமைப்பு பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். மேயர் வேலுச்சாமி கூறுகையில், “”டெக்ஸ்டூல் பாலம் கட்டுவதற்கு முன்பாக ரோடு அகலமாக இருந்தது.
தற்போதைய பாலத்தை இருவழிப்பாதையாக மட்டுமே பயன்படுத்த முடிகிறது. அதே இடத்தில் இன்னொரு இருவழிப்பாதை பாலம் கட்ட, முதல்வர் நிதி ஒதுக்கியுள்ளார். சத்திரோட்டில் கட்டப்படும் மழைநீர் வடிகாலை, கணபதி பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள ஓடையில் சேர்க்க வேண்டும். பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் பணிக்கு, சத்திரோட்டை அகலப்படுத்த வேண்டும். ரோடு அகலப்படுத்த நெடுஞ்சாலைத்துறை முன்வராத நிலையில், மாநகராட்சி நிர்வாகம் மூலம் இப்பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. சத்தி ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், தனியார் நிலத்தை கையகப்படுத்தவும், புறம்போக்கு நிலங்களை எடுக்கவும் சர்வே நடக்கிறது. நில உரிமையாளர்களுக்கு மாநகராட்சி மூலம் பணம் பட்டுவாடா செய்யப்படும்,” என்றார்.