தினமலர் 29.04.2010
சத்துணவுக்கூடங்களை சீரமைக்க வேண்டும் மன்னை நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
மன்னார்குடி,: சத்துணவு கூடங்களை சீரமைக்க வேண்டும் என்று நகராட்சிக்கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.மன்னார்குடி நகராட்சி கூட்டம் தலைவர் கார்த்திகா உத்தமன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் தமிழரசி, ஆணையர் மதிவாணன், பொறியாளர் முருகானந்தன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம்:
கலைவாணன், சேகர்: கர்ப்பிணி பெண்களுக்காக வழங்க வேண்டிய 15 லட்சம் ரூபாயை கருவூலத்தில் திருப்பி செலுத்தியது ஏன்?
ஆணையர்: மார்ச் 31க்குள் செலவாகாத தொகையை கருவூலத்தில் கட்டி விடவேண்டும். பணம் கட்டியபோது பட்டியலில் பெயர் இருந்தும், பணம் பெறாத கர்ப்பிணி பெண்கள் பற்றி தணிக்கையில் கண்டறியப்பட்டு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடன் புதிதாக ஒரு பட்டியல் இருக்கிறது. அந்த பணத்தையும், இந்த பணத்தையும் சேர்ந்து 30 லட்சம் கொடுத்து விடுங்கள். நாங்கள் எல்லோருக்கும் தவறாமல் கொடுத்து விட்டு அறிக்கை கொடுக்கிறோம் என்று கூறினோம். அதை கலெக்டர் ஒப்புக்கொண்டார்.
கலைவாணன்: பயனாளிகளுக்கு பணத்தை ஏன் உரிய நேரத்தில் கொடுக்கவில்லை.
ஆணையர்: பலருடைய விண்ணப்பங்களில் போதுமான தகவல்கள் இல்லாமல் இருந்தது. அதன்காரணமாக நிறைய மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்தது. அதனால் அந்த பணத்தை திருப்பி செலுத்தவேண்டி வந்தது. இப்போது அந்த குறைபாடுகளை நீக்கி அவர்களுக்கும் புதிதாக பணம் கோரி இருப்பவர்களுக்கும் சேர்த்து மொத்தம் 30 லட்சம் கேட்கப்பட்டுள்ளது.
வடுகநாதன்: கர்ப்பிணி பெண்களுக்கு உதவித்தொகை வழங்கும் விண்ணப்பம் இலவசமாக வழங்கப்படுமா அல்லது அதற்கு கட்டணம் ஏதும் செலுத்தவேண்டுமா.
ஆணையர்: இலவசமாகதான் அந்த விண்ணப்பத்தை வழங்குகிறோம். வடுகநாதன்: என்னுடைய வார்டில் ஒரு கர்ப்பிணி பெண் பணம் கொடுத்து விண்ணப்பத்தை வாங்கி உள்ளார். இதுகுறித்து விசாரிக்க வேண்டும்.
ஆணையர்: விசாரிக்கிறோம்.
கலைவாணன்: என்னுடைய வார்டில் சத்துணவு கூடம் மிகவும் சிதிலமடைந்துள்ளது. அதை சீரமைக்க வேண்டும்.
தலைவர்: கலெக்டரிடம் கேட்டுள்ளோம். உரிய நேரத்தில் தொகை கிடைக்காவிட்டால் மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி சத்துணவு கூடம் கட்டுவோம். குடிநீர் பிரச்னை நகரில் அதிமாக உள்ளது.
ஆணையர்: நல்லமுறையில் திட்டமிடப்பட்டு மாளிகைமேடு, பூக்கொல்லை, ராஜாபாளையம், மன்னைநகர் ஆகிய இடங்களில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்ட திட்டமிடப்பட்டு அதற்கான நிதியை அரசிடமிருந்து பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டம் நிறைவேறுமானால் அடுத்து 5 ஆண்டுகளுக்கு நகரில் குடிநீர் பிரச்னை இருக்காது.
கார்த்திகேயன்: கடைவீதியில் மாடுகள் சுற்றி திரிகின்றன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலைவர்: மாடுகளை பிடித்துவந்து நகராட்சி வளாகத்தில் கட்டி வைத்து அபராத தொகை வசூலிக்கலாம்.(அப்போது சலீம், வடுகநாதன் இருவரும் திமுக உறுப்பினர்களுக்கே பேச வாய்ப்பு அளிப்பதை கண்டித்து வெளிநடப்பு செய்தனர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ச்சியாக பல உறுப்பினர்களும் ஒருவருக்கொருவர் பேசினர். நகராட்சித் தலைவர் தனது இருக்கையை விட்டு எழுந்து வெளியே சென்று விட்டார். பின்னர் ஒரு மணி நேரத்திற்கு பிறகு கூட்டம் தொடர்ந்தது.)
சலீம்: பாதாள சாக்கடை திட்டம் என்னவானது?தலைவர்: பாதாள சாக்கடை திட்டம் வருவது உறுதி. அரசு அனுமதி கொடுத்துவிட்டது. நிதி நிலை சீரடைந்ததும் உரிய தொகை அனுப்புவதாக பதில் வந்துள்ளது. கார்த்திகேயன்: 33வது வார்டில் உள்ள சத்துணவுக்கூடம் மிகவும் பழுதடைந்துள்ளது. இதை சீரமைக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகிறேன். பலன் இல்லை. தலைவர்: இதுகுறித்து கலெக்டருக்கு கடிதம் எழுதி விரைவில் புதிய சத்துணவு கூடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.