மாலை மலர் 09.09.2009
சமச்சீர் கல்வி திட்டம் மூலம் தமிழக குழந்தைகளுக்கு ஒரேவித தரமான கல்வி கிடைக்கும்; கருணாநிதி விளக்கம்
சென்னை, செப். 9-
முதல்–அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சமச்சீர் கல்வித் திட்டம், தமிழகத்திலுள்ள குழந்தைகள் அனைவருக்கும் வேறுபாடின்றி, ஒரே விதமான, தரமான கல்வியைக்கொடுக்க வேண்டும் என்னும் அடிப்படையில் தமிழக அரசு உருவாக்கும் புதிய திட்டமாகும்.
இத்திட்டத்தின்படி, தமிழகத்தில் தற்போதுள்ள மாநிலக்கல்வி வாரியம், மெட்ரிக்குலேசன் கல்வி வாரியம், ஆங்கிலோ இந்தியன் கல்வி வாரியம், ஓரியண்டல் கல்வி வாரியம் ஆகிய நான்கு கல்வி வாரியங்களையும் ஒருங்கிணைத்து இந்த நான்கு வாரியங்களிலும் உள்ள சிறப்பு அம்சங்களைத் தொகுத்து, ஒரு பொதுக்கல்வி வாரியத்தை அமைத்திடவும்; இது வரை நான்கு தனித் தனி வாரியங்களின்கீழ் செயல்பட்டு வந்த பள்ளிகள் அனைத்திற்கும், ஒரு பொது பாடத்திட்டம், பொதுவான பாட நுல்கள், பொதுவான தேர்வு முறை ஆகியவைகளை நடைமுறைப்படுத்திடவும், பொதுப்பாடத் திட்டத்தின் கீழ் பாடநூல்கள் எழுதப்பட்டு, அவற்றை அடுத்த கல்வி ஆண்டு (2010-2011) முதல் 1-ம் வகுப்பு மற்றும் 6-ம் வகுப்புகளுக்கும், அதற் கடுத்த கல்வி ஆண்டில் ஏனைய வகுப்புகளுக்கும் இத்திட்டத்தைச் செயல்படுத் திடவும் தமிழக அரசு கொள்கை அளவில் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், பொதுப்பாடத்திட்டம் வகுப்பதற்கு முன்பாகவே, எந்தவகையான பாடத்திட்டம் வரப்போகிறது என்பது தெரியாமலேயே ஒரு பிரிவினர் சமச்சீர் கல்வியை எதிர்ப்பதும்; சமச்சீர் கல்விக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டுக் குழப்பங்களை ஏற்படுத்துவதும் சரியான அணுகுமுறை ஆகாது என்ப தால், அவ்வாறு எதிர்ப்புகளைத் தெரிவிக்கும் அமைப்புகளுக்கும் பயன்படும் வகையில், சமச்சீர் கல்வியின் சிறப்பம் சங்கள் பின்வருமாறு தெளிவு படுத்தப்படுகின்றன.
சமச்சீர் கல்வியின் சிறப்பு அம்சங்கள்: –
சமச்சீர் கல்வி என்பது, இதுவரை நடைமுறையில் இருக்கும் ஒரு வாரியத்தின் பாடத்திட்டத்தை மற்ற வாரியங்களின் பள்ளிகள் மீது திணிக்கும் நோக்கம் கொண்டது அல்ல;
ஒவ்வொரு வாரியத்திலும் தற்போது பின்பற்றப்படும் பாடத்திட்டங்களை ஒப்பிட் டுப் பார்க்கும்போது பாடத்திட்டத்தின் தலைப்புகளில் பெரிய மாறுதல்கள் எதுவும் காணப்படவில்லை என்பதால், நான்கு கல்வி வாரியங்களின் பாடத்திட்டங்களிலும் உள்ள சிறப்பம் சங்களைத்தேர்வு செய்து, அவற்றை ஒருங்கிணைத்து ஒரு பொதுவான பாடத்திட்டம் உருவாக்கப்படும்.
புதிய பொதுப் பாடத்திட்டம் வகுக்கப்பட்டவுடன் அனைத்து வாரியப் பிரதிநிதிகளுக்கும் அதன் பிரதிகள் வழங்கப்பட்டு, அவற்றின்மீது அவர்களின் கருத்துகள் கேட்கப்படும்; பின்னர் ஒன்றிய, மாவட்ட அளவில் விவாதிக்கப்பட்டு இறுதி செய்யப்படும்.
பொதுப் பாடத்திட்டம் வகுக்கப்பட்டுப் பாடப்புத்தகங்கள் எழுதும்போதும் அனுபவம் வாய்ந்த அனைத்துத் தரப்பு ஆசிரியர்களுக்கும் வாய்ப்புகள் அளிக்கப்பட்டு – சிறந்த ஆசிரியர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு, பாடப்புத்தகங்கள் எழுதும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
பாடத்திட்டம், பாட நூல்கள் குறித்து ஒளிவு மறைவின்றி பொது விவாதங்களின் மூலம் முடிவுகள் மேற்கொள்ளப்படும்.
தமிழக அரசு ஏற்கனவே தெளிவாக அறிவித்துள்ள படி, பயிற்று மொழியாக தமிழுடன் தற்போது நடைமுறையில் உள்ள பிற மொழிகளும் தொடர வழிவகை செய்யப்படும்.
இவ்வாறு, தரமான கல்வியை அனைத்து மாணவர்களுக்கும் ஒரே முறையில்–ஒரே சீராக வழங்கிடும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்படும் சமச்சீர் கல்வித்திட்டத்திற்குத் தமிழக மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் எனத்தமிழக அரசின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.