தினமலர் 08.04.2010
சமத்தூர் பேரூராட்சியில் துணைத்தலைவர் தேர்வு
பொள்ளாச்சி : சமத்தூர் பேரூராட்சி துணைத்தலைவராக 7வது வார்டு உறுப்பினர் கந்தசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.பொள்ளாச்சி அடுத்துள்ள சமத்தூர் பேரூராட்சி துணைத்தலைவராக 5வது வார்டு உறுப்பினர் பழனிச்சாமி பணியாற்றினார். இவர், சமீபத்தில் இறந்து விட்டதால், துணைத்தலைவர் பதவி காலியாக இருந்தது. கோவை கலெக்டர் உத்தரவின் பேரில் துணைத்தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டது.பேரூராட்சி தலைவர் மங்கையர்கரசியின் அணியில் மொத்தம் ஆறு கவுன்சிலர்களும், முன்னாள் தலைவரும் தற்போதைய 7வது வார்டு கவுன்சிலருமான கந்தசாமி அணியில் ஆறு கவுன்சிலர்ளும் இருந்தனர். துணைத்தலைவர் இறந்ததால் தலைவர் அணியில் இருக்கும் கவுன்சிலர்களின் எண்ணிக்கை குறைந்தது.
இதனால், 7வது வார்டு கவுன்சிலர் கந்தசாமி துணைத்தலைவர் பதவிக்கு மனுக்கொடுத்தார். போட்டியில்லாததால் அவர் துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார். எந்த கட்சியையும் சேராத கந்தசாமி, 1997- 2001 வரை சமத்தூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க தலைவராகவும், 2001- 2006 சமத்தூர் பேரூராட்சி தலைவராகவும் பணியாற்றியுள்ளார். சமத்தூர் பேரூராட்சி 10வது வார்டு உறுப்பினர் பாலசரஸ்வதி, துணைத்தலைவர் கந்தசாமியின் மனைவியாவார்.