தினமலர் 11.03.2010
சமுதாய கூடத்துக்கு விரைவில் இடம் தேர்வு : நகராட்சி தலைவர் தகவல்
குறிச்சி : “பிள்ளையார்புரத்தில், சமுதாயகூடத்திற்கு விரைவில் இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் துவங்கும்‘ என, நகராட்சித்தலைவர் பிரபாகரன் தெரிவித்தார்.
சுந்தராபுரத்தை அடுத்துள்ள பிள்ளையார்புரத்தில், மாதா கோவில் உள்ளது. அருகிலுள்ள இடத்தில் கட்டுமான பணிகள் நடக்கிறது. இவ்விடம் சமுதாயக்கூடம் கட்ட தேர்வு செய்யப்பட்டது; நாகதேவி கோவில் அங்கு இருந்தது எனக்கூறி, ஒரு பிரிவினர் கட்டுமான பணியை நிறுத்தக் கோரி நகராட்சித் தலைவர் பிரபாகரனிடம் மனு கொடுத்தனர். “அதிகாரிகளிடம் பேசி முடிவெடுக்கப்படும்‘ என, அவர்களிடம் தலைவர் தெரிவித்தார். மாவட்ட கலெக்டரிடம் அப்பகுதி மக்கள் மனு ஒன்று கொடுத்தனர். அதில், “சர்ச் கட்டப்படும் இடம் சமுதாயக்கூடத்திற்கு ஒதுக்கப்பட்டது; 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது‘ என, குறிப்பிட்டிருந்தனர்.
நகராட்சித்தலைவர் பிரபாகரன் கூறியதாவது: சர்ச் கட்டுமான பணி நடக்கும் இடம், அரசால் சர்ச் நிர்வாகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து ஆவணங்களும் அவர்களிடம் உள்ளது. இவ்விடத்தில் சமுதாயக்கூடம் கட்டும் திட்டமும் நகராட்சியிடம் கிடையாது; 40 லட்சம் ரூபாய் நிதியும் ஒதுக்கப்படவில்லை. விரைவில் இப்பகுதியில் இடம் பார்க்கப்பட்டு, 25 லட்சம் ரூபாய் மதிப்பில் சமுதாயக்கூடம் கட்டப்படும். இரு பிரிவினருக்கும் எவ்வித பாதிப்புமின்றி இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு பிரபாகரன் தெரிவித்தார்.