தினகரன் 28.06.2010
சம்பள பாக்கி உடனே வழங்கப்படும் துப்புரவு தொழிலாளிகளுக்கு சலுகை திட்டங்கள் அறிவிப்பு
பெங்களூர், மே 28:குல்பர்கா மாநகராட்சியில் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு பாக்கி உள்ள 34 மாத சம்பளம் ஒரே தவணையில் வழங்கப்படும் என்று நகர வளர்ச்சிதுறை அமைச்சர் எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறிதாவது:
பணி நிரந்தரம், சம்பள உயர்வு உள்பட பல கோரிக்கைகளை முன்வைத்து, குல்பர்கா மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்கள் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதல் அன்புபாயி என்ற பெண் தொழிலாளி உயிரிழந்துள்ளார்.
அவர் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவரின் மரணம் ஈடு செய்ய முடியாத ஒன்று என்பதில் எந்த விதமான மாற்று கருத்தில்லை.
துப்புரவு தொழிலாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்துகொடுக்க அரசு தயாராகவுள்ளது. போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தி வரும் முன்னாள் அமைச்சர் எஸ்.கே.காந்தாவுடன் முதல்வர் எடியூரப்பா மற்றும் மாநில உள்துறை அமைச்சர் ஆச்சார்யா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி பல வாக்குறுதிகள் கொடுத்தனர். இருந்தும், அரசின் உறுதியை ஏற்காமல், தொழிளர்களை தூண்டிவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
தொழிலாளர்களின் 34 மாத சம்பளத்தை ஒரே தவணையில் வழங்கப்படும். மேலும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு மகளிர் சுய உதவிக் குழுவின் மூலம் கல்வி ஊக்க தொகை வழங்கப்படும்.
ஆஷ்ரயா திட்டத்தின் கீழ் வீடு கட்டி கொடுப்பதுடன், அரசு செயல்படுத்தும் திட்டங்களில் துப்புரவு தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இவ்வாறு நகர வளர்ச்சிதுறை அமைச்சர் எஸ்.சுரேஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறினார்.