தினமணி 07.04.2010
சரிந்த அடுக்குமாடி கட்டடத்தை இடிக்கும் பணி துவக்கம்
கோவை, ஏப்.6: கோவையில் 80 சத பணிகள் முடிந்த நிலையில் பூமிக்குள் சரிந்த குடிசை மாற்று வாரியத்தின் அடுக்குமாடிக் கட்டடத்தில் பக்கவாட்டுச் சுவர்களை இடிக்கும் பணி செவ்வாய்க்கிழமை துவங்கியது.
÷ஜவஹர்லால் நேரு நகர புனரமைப்புத் திட்டத்தில் கோவை அம்மன் குளம் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் ரூ.29 கோடியில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு பிளாக்கிலும் 48 வீடுகளைக் கொண்ட 16 பிளாக்குகள் கட்டப்படுகின்றன. ஒவ்வொரு அடுக்குமாடிக் கட்டடமும் தரை மற்றும் 3 தளங்களைக் கொண்டது.
÷கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. ஏறத்தாழ 80 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில் அடுக்குமாடிக் கட்டடத்தின் ஒரு பிளாக் திடீரென பூமிக்குள் இறங்கியது. அதைத் தொடர்ந்து குடிசை மாற்று வாரிய அமைச்சர் சுப.தங்கவேலன் நேரில் ஆய்வு செய்தார்.
÷மேலும், அடுக்குமாடிக் கட்டடம் பூமிக்குள் சரிந்தது குறித்து ஆய்வு செய்ய குடிசை மாற்று வாரியத்தின் ஆலோசகர் ஏ.ஆர்.சாந்தகுமார் தலைமையில் 3 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இக் குழுவின் ஆய்வில் அந்த அடுக்குமாடிக் கட்டடம் ஞாயிற்றுக்கிழமை வரை தரைமட்டத்தில் இருந்து 56 செ.மீ. கீழே இறங்கியுளளது தெரிய வந்தது. அதையடுத்து அடுக்குமாடிக் கட்டடத்தின் பக்கவாட்டுச் சுவர்களை இடிக்கும் பணி செவ்வாய்க்கிழமை துவங்கியது.
÷இது குறித்து குடிசை மாற்று வாரிய அதிகாரிகளிடம் கேட்டதற்கு, “அம்மன் குளத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுவதற்கு முன்பே மண் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் சாதகமான முடிவு பெறப்பட்ட பிறகே கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. நிபுணர் குழுவின் முழுமையான ஆய்வுக்குப் பிறகு கட்டடம் சரிந்ததற்கான காரணம் தெரியவரும். தற்போது அந்த கட்டடத்தின் பாரத்தைக் குறைக்கும் வகையில் பக்கவாட்டுச் சுவர்களை இடிக்க நிபுணர் குழு அறிவுறுத்தியுள்ளது. அப் பணி நடைபெற்று வருகிறது. கட்டடத்தை முழுமையாக அகற்றுவதா, இல்லையா என்பது குறித்து அரசு தான் முடிவு செய்யும்’ என்றனர்.