தினமணி 07.09.2013
தமிழகத்திலேயே முதல்முறையாக திடக்கழிவு மேலாண்மைத்
திட்டம் பாலக்கோடு தேர்வு நிலைப் பேரூராட்சியில் சிறப்பாகச்
செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டம் மாநிலம் முழுவதிலும் செயல்படுத்தப்பட்டால் அரசுக்கு கணிசமான வருவாய் கிடைப்பதுடன், பேரூராட்சிகள் சுகாதாரமாகிவிடும்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தேர்வு நிலை பேரூராட்சியின் மக்கள்தொகை
20,645. இங்கு மாநிலத்திலேயே முதல்முறையாக திடக்கழிவு மேலாண்மைத் திட்டம்
கடந்த 2004ஆம் ஆண்டு, பிப்ரவரி 5-இல் தொடக்கிவைக்கப்பட்டது.
பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அன்றாடம் சேகரமாகும் மக்கும், மக்காத
குப்பைகள் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பெறப்பட்டு தனித்தனியாக
பிரிக்கப்படுகின்றன.
நாளொன்றுக்கு சேகரமாகும் 5 டன் குப்பையில் ஒரு டன் மக்கும்
குப்பையாகவும், 7 கிலோ பிளாஸ்டிக் கழிவும் கிடைக்கிறது. தரம்
பிரிக்கப்படும் குப்பைகள் கூசுக்கல்மேடு பகுதியில் உள்ள உரக் கிடங்குக்கு
எடுத்துச் செல்லப்படுகின்றன.
பிளாஸ்டிக் மறு சுழற்சி: இங்கு ரூ.8 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள
இயந்திரத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் சுத்தம் செய்து சிறு சிறு
துகள்களாக்கப்பட்டு மறு சுழற்சி செய்யப்பட்டு பேரூராட்சிப் பகுதியில்
தார்ச்சாலை அமைக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.
உரமாகும் மக்கும் குப்பை: பிரிக்கப்படும் மக்கும் குப்பைகள் லாரிகளில்
அதற்கென அமைக்கப்பட்டுள்ள உரப் பூங்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு,
தண்ணீர், பஞ்சக்கவ்யம் தெளித்து உலர்களங்களில் உலர வைக்கப்பட்டு
கலக்கப்படுகின்றன. 60 நாள்களுக்குப் பிறகு உரமானதும் மூட்டைகளில்
கட்டப்படுகிறது.
பேரூராட்சி பகுதியில் கடந்த மாதம் 24ஆம் தேதி திறக்கப்பட்ட விற்பனை
நிலையத்துக்கு கொண்டு செல்லப்படும் உரம் விவசாயிகளுக்கு விற்பனை
செய்யப்படுகிறது. இயற்கை உரம் கிலோ ஒரு ரூபாய் என்பதால் விவசாயிகள்
அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர்.
மக்காத குப்பை: தரம் பிரிக்கப்படும் மக்காத குப்பை பிளாஸ்டிக் கழிவு
இயந்திரம் மூலம் துகள்களாக்கப்பட்டு மறுசுழற்சி மற்றும் தார்ச்சாலைக்கு
பயன்படுத்தப்படுகிறது.
உரம் மூலம் வருவாய்: திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் தொடக்கப்பட்ட
2004ஆம் ஆண்டு முதல் சுமார் 283 மெட்ரிக் டன் உரம் ரூ.1.55 லட்சத்துக்கு
விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ் கூறியது:
பேரூராட்சியை குப்பை இல்லாமல் ஆக்குதல், சுற்றுப்புறத்தை தூய்மையானதாக
மாற்றும் நோக்கில் இந்தத் திட்டம் தொடக்கப்பட்டது. மகளிர் சுய உதவிக்
குழுவில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள 40 பெண்கள் குப்பை சேகரிக்கும்
பணியில் ஈடுபட்டுள்ளதன் மூலம் அவர்களுக்கு வருவாய் கிடைத்து வருகிறது.
குப்பைகள் மூலம் உரம் தயாரித்து விற்பதோடு, பேரூராட்சிப் பகுதியில்
தார்ச்சாலை அமைக்கவும் பயன்படுகிறது. இந்தத் திட்டம் வெற்றிகரமாக
செயல்படுத்தப்பட்டு வருவதால் தமிழகம் முழுவதிலும் நடைமுறைப்படுத்தினால்
சுகாதாரம் மேன்மையடைவதுடன், மகளிர் சுய உதவிக் குழுவினர் வருவாய் ஈட்ட
வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என்றார் அவர்.