தினகரன் 08.08.2012
சாத்தான்குளத்தில் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க சிறப்பூர் குடிநீர் திட்டம் புனரமைப்பு
சாத்தான்குளம், : சாத்தான்குளத்தில் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க சிறப்பூர் குடிநீர் திட்டம் புனரமைக்கப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் பேரூராட்சியில் 1986ம் ஆண்டு உண்டான குடிநீர் பிரச்சனையை போக்க அப் போதைய தலைவர் ரத்தினசாமியால் சிறப்பூர் குடிநீர் திட்டம் கொண்டு வரப் பட்டு பேரூராட்சி மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டது.
பின்னர் அங்கு தண்ணீர் வறண்டதால் இத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் பொன்னன்குறிச்சியிலிருந்து சாத்தான்குளம் – உடன்குடி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டது. இதன்மூலம் சாத்தான்குளம் மக்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வழங்கப்பட்டது.
இந்நிலையில் போதிய மழை இல்லாததால் ஸ்ரீவைகுண்டம் அணையில் தண்ணீர் இன்றி வறண்டது. இதனால் பொன்னன்குறிச்சியிலுள்ள ஆழ்துளை கிணறுகளிலும் தண்ணீர் பற்றாக்குறை உண்டானது. இதனால் சாத்தான்குளத்திற்கு குடிநீர் வினியோகம் அடியோடு பாதிக்கப்பட்டது. இதனால் இப்பகுதி மக்கள் கூடுதல் விலைக்கு குடிநீர் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
எனவே சாத்தான்குளம் பேரூராட்சி மூலம் சிறப்பூர் குடிநீர் திட்டத்தை புனரமைப்பு செய்து குடிநீர் வழங்க முடிவு செய்யப்பட்டது.அதன்படி சிறப்பூர் பகுதியில் மறு ஆய்வு நடத்தி குடிநீர் வழங்கிட பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. அதன்படி சிறப்பூரில் மேலும் 4 ஆழ்துளை புதி தாக போடப்பட்டது. அதில் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் குடிநீர் தேவையை ஓரளவு பூர்த்தி செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது சாத்தான் குளம் பேரூராட்சி மக்களுக்கு சுழற்சி முறையில் தினமும் 1 மணி நேரம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. போர்க்கால நடவடிக்கை மேற்கொண்ட பேரூராட்சித் தலைவர் ஜோசப், நிர்வாக அதிகாரி முருகேசன் மற்றும் கவுன்சிலர்களுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.