சாத்தான்குளம் பேரூராட்சியில் குப்பை கொட்ட கூடுதல் இடம் கலெக்டர் உத்தரவு
சாத்தான்குளம்: தினகரன் செய்தி எதிரொலியாக சாத்தான்குளம் பேரூராட்சியில் குப்பைகளை கொட்ட கூடுதலாக இடமளிக்கும்படி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
சாத்தான்குளம் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கருமேனி ஆற்றின் கரையோரம் கொட்டப்படுகிறது. இதில் அழுகிய நாய், பன்றி, மற்றும் கோழி கழிவுகளை கொட்டுவதாலும், குப்பைகளை தீயிட்டு கொளுத்துவதாலும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து குப்பைகளை கொட்ட வருவாய்த்துறைக்கு சொந்தமான கல்லாம்குத்து பகுதியில் ஒரு ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆயினும், அங்கு குப்பை கொட்டப்படாதது குறித்து தினகரனில் கடந்த 5ம் தேதி செய்தி வெளியிடப்பட்டது.
இதையடுத்து, கலெக்டர் ஆசிஷ்குமார் குப்பைகள் கொட்டும் இடம் மற்றும் குப்பைகள் கொட்ட தேர்வு செய்யப்பட்ட புதிய இடத்தை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். சாத்தான்குளம் தாசில்தார் குமார், நிலஅளவையர் செல்வராஜ், விஏஓ செந்தில்குமார் ஆகியோர் மூலம் கலெக்டர் புதிய இடத்தை அளந்து பார்த்தார்.
அப்போது பேரூராட்சி தலைவர் ஜோசப், இந்த இடத்தை தேர்வு செய்து தந்தால் உடனடியாக பேரூராட்சி சார்பில் பாதை மற்றும் மதில் அமைத்து குப்பைகளை கொட்ட தயாராக இருப்பதாக தெரிவித்தார். உடனே கலெக்டர், ‘குப்பைகளை கொட்ட இந்த இடம் போதாது. எனவே, இதே இடத்தில் கூடுதலாக ஒன்றரை ஏக்கர் அதிகரித்து இரண்டரை ஏக்கராக வழங்குங்கள்’ என வருவாய்த்துறையினருக்கு உத்தரவிட்டார். உடனடியாக குப்பைகளை கொட்ட நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்தார்.
பேரூராட்சி செயல் அலுவலர் முருகேசன், கவுன்சிலர்கள் சரவணன், இஸ்மாயில், பேரூராட்சி இன்ஜினியர் பிரபாகர், ஒன்றிய ஆணையாளர் ஜேம்ஸ் நிர்மல்ரோஸ், மண்டல துணை தாசில்தார் செந்தூர்ராஜன், வருவாய் ஆய்வாளர் (பொறுப்பு) அகிலா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.