தினமணி 05.08.2010
சாமளாபுரம் குளத்தில் படகுஇல்லம் அமைக்க திட்டம்
திருப்பூர், ஆக. 4: திருப்பூர் அருகிலுள்ள சாமளாபுரம் குளத்தில் ரூ. 1.43 லட்சம் மதிப்பில் படகு இல்லம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான பணிகள் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் சி.சமயமூர்த்தி தெரிவித்தார்.÷
திருப்பூர் மாநகர், சுற்றுவட்டார பகுதியில் போதிய பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாததால் தொழிலாளர்கள் உள்பட அனைத்துத்தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டவுடன் திருப்பூரை ஒட்டியுள்ள சாமளாபுரம், ஆண்டிபாளையம் குளங்களை தூர்வாரி படகு இல்லங்களுடன் கூடிய பூங்காக்கள் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், 1.5 ஆண்டுகளுக்கு மேலான நிலையிலும், பணிகள் இதுவரை நடைபெறவில்லை. ÷இதேபோல், திருப்பூரை அடுத்துள்ள பெரியபாளையம் குளத்தை தூர்வாரி பறவை கள் சரணாலயம், படகு இல்லம் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சி.சமயமூர்த்தி கூறியது:÷
சாமளாபுரம் குளத்தை தூர்வாரி படகு இல்லம் அமைக்க ரூ. 1.43 லட்சத்தில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் அக் குளத்தில் படகு இல்லம் ஏற்படுத்தப்படும். ÷அரசு மற்றும் மக்கள் பங்களிப்பில் ஆண்டிபாளையம் குளத்தை தூர்வாரி படகு இல்லத்துடன் கூடிய பூங்கா அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான திட்டஅறிக்கை தயாரிக்கும் பணிகளும் தற்போது நடைபெற்றுக்கொண்டுள்ளன. ÷இதேபோல், பெரியபாளையம் குளத்திலும் படகுஇல்லம் அமைக்கவும், அவிநாசி அருகே கேதபாளையம் வனப்பகுதியில் மான்கள் அதிகஅளவில் இருப்பதால் அங்கு உயிரியல் பூங்கா அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.÷
விரைவில் அதிகாரிகளுடன் ஆய்வுகள் மேற்கொண்டு அவற்றை செயல்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பொழுதுபோக்கு அம்சங்களை கூடுதலாக்க போதுமான நிதி இருந்தும் அவற்றுக்கு போதுமான இடங்கள் திருப்பூர் மாநகர சுற்று வட்டாரத்தில் இல்லை. இதனால், மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களை கூடுதலாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.