தினமணி 12.07.2013
சாலைகளில் குப்பை கொட்டினால் அபராதம்!

ஒவ்வொரு வார்டிலும் சாலைகளில் குப்பை கொட்டும் 3
பேரிடமாவது தினமும் அபராதம் வசூலிக்கவேண்டும் என்று வார்டு துப்புரவு
ஆய்வாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள சாலைகளில் பொதுமக்கள் குப்பைகளைக் கொட்டினால் அபராதம்
விதிக்கப்படும் என்று கடந்த 2008-ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி அறிவித்தது.
வீட்டு குப்பைகளை கொட்டுவோருக்கு ரூ. 100-ம், கட்டட இடிபாடுகளை
கொட்டுவோருக்கு ரூ. 500-ம் அபராதம் விதிக்கப்பட்டு வந்தது.
பின்னர் இந்த தொகை, வீட்டுக் குப்பைகள் கொட்டுவோருக்கு ரூ. 500-ஆகவும்,
கட்டட இடிபாடு குப்பைகளைக் கொட்டுவோருக்கு ரூ. 2,000-ஆகவும் கடந்த ஆண்டு
ஜூன் மாதம் உயர்த்தப்பட்டது. இப்போது இந்த உயர்த்தப்பட்ட அபராத தொகை,
குப்பைகள் கொட்டுவோரிடம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் உள்ள சாலைகளில் குப்பை கொட்டுவதை தடுக்க இந்த திட்டம்
செயல்படுத்தப்பட்டது. மேலும் இந்த திட்டம் மூலம் குப்பையை குப்பைத்
தொட்டியில் போடாமல் அதன் அருகில் போடுபவர்களிடம் இருந்தும் அபராதம்
வசூலிக்கப்பட்டது. அபராதம் விதிக்கப்பட்டாலும் சாலையில் குப்பை கொட்டுவதை
பொதுமக்கள் நிறுத்தவில்லை. இதற்கு இந்த திட்டம் முழுமையாக
செயல்படுத்தப்படாததும் முறையான விழிப்புணர்வு ஏற்படுத்தாததும்தான் காரணம்
என்று மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் மற்ற நகரங்களில் வசூலிக்கப்படும் மொத்த அபராதத் தொகையை விட
சென்னை மாநகராட்சி மிகக் குறைந்த அளவே அபராதம் வசூலித்துள்ளது என்றும்,
இதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுகிறார்கள் என்றும் புகார்கள் கூறப்பட்டன.
இதனையடுத்து பொதுமக்களிடம் இருந்து அதிக அளவில் அபராதத் தொகை வசூல் செய்ய
முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு வார்டிலும் 3
பேரிடமாவது தினமும் அபராதம் வசூல் செய்யப்படவேண்டும் என்று வார்டு
துப்புரவு ஆய்வாளர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளதாக
மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: பொதுமக்களிடம் இருந்த
அபராதம் வசூலிக்கும் திட்டம் கிடப்பில் போடப்படவில்லை. நன்றாக செயல்பட்டு
வருகிறது. இப்போது 200 வார்டுகளிலும் உள்ள துப்புரவு ஆய்வாளர்களிடம் ஒரு
வார்டில் குறைந்தது 2 அல்லது 3 பேரிடமாவது அபராதம் வசூலிக்க வேண்டும் என
அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீட்டுக்கு வெளியே குப்பை கொட்டப்பட்டிருந்தால்
அபராதம் வசூலிக்கப்படும். வீட்டுக்கு வெளியில் வேறு யாராவது குப்பை
கொட்டியிருந்தாலும், வீட்டு உரிமையாளரிடமே அபராதம் வசூலிக்கப்படும். மேலும்
அவர்களிடம் இனிமேல் வேறு யாரும் குப்பை கொட்டாதவாறு கண்காணிக்க வேண்டும்
என்று தெரிவிக்கப்படுகிறது.
ஓராண்டில் ரூ. 15 லட்சம்: சென்னை மாநகராட்சியால் கடந்த ஆண்டு ஏப்ரல்
மாதம் முதல் இந்தாண்டு ஜூலை மாதம் தொடக்கம் வரையில் 3,300 பேருக்கு அபராதம்
விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் ரூ. 15 லட்சம் வரையில் வசூல்
செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.